tamilnadu

img

மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புக.... வாலிபர்கள் கோட்டைநோக்கி பேரணி....

சென்னை:
மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னையில் ஜனவரி 29 வெள்ளியன்று கோட்டைநோக்கி பேரணி நடைபெற்றது.  

க.பீம்ராவ்
மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் வெண்கொடி அசைத்து துவக்கி வைத்து பேசினார். அவர் தம் உரையில்,  தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளை தனியார்மயம் என்ற பெயரில் பினாமிகளை வைத்து தன்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்ற னர். தேசத்தின் சொத்துக்கள் என வர்ணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது அல்லது சூறையாடப்படுகிறது. அதிமுக அரசு, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் காவு கொடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு அடிமை சேவகம்செய்யும் மாநில அரசுக்கு எதிராக வாலிபர் சங்கம் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மின்வாரியத்தில் 52ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. படித்த ஒரு கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த நிலை முரணாக இருக்கிறதல்லவா. வேலைகேட்டு போராடும் வாலிபர் சங்கத்தையோ, நியாயமான பணிநியமனம், பணிபாதுகாப்பு கேட்டு போராடும் மின்ஊழியர் மத்திய அமைப்பை ஆலோசிக்காமல் சில லட்டர்பேடு சங்கங்களை வைத்து மாநில அரசு பணிநியமனம் செய்வது  என்ன நியாயம்?  நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணி வழங்காவிட்டால் வாலிபர்களின் இந்த போராட்டம்இன்னொரு வடிவம் பெற்று ஆட்சியாளர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்தார். 

எஸ்.ராஜேந்திரன்
மின்ஊழியர் மத்திய அமைப்பின்பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன்பேசுகையில்,  அரசின் முதன்மைத் துறையாக மின்சாரவாரியத்தில் பணிநிலைகளில் மாற்றம் செய்ய வேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் இந்த மாநில அரசு அதுபோன்ற நடவடிக்கையில் என்றுமே ஈடுபட்டது கிடையாது. மின்வாரியத்தில் பணிநியமனம் குறித்து சிஐடியு வழக்கு தொடுத்துள்ளது உண்மைதான். 5 ஆயிரம் பேருக்கு பணிநியமன உத்தரவுவழங்கும் போது அதற்கு சமமான பதவிகள் ஒழிக்கப்படும் என்ற வாரியத்தின் முடிவுக்கு எதிராகத்தான் மின் ஊழியர் மத்தியமைப்பு வழக்கு தொடுத்தது.மின்சாரத்துறையில் பல ஆயிரக்கணக்கான ஒப்பந்தத்தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்பது சங்கத்தின் கோரிக்கையாகும். கொரோனா காலத்தை காரணம் காட்டி 40வயதை கடந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மின்சாரவாரியத்தின் நிரந்தரமான பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் அரசின் திட்டத்தை தொழிற்சங்கம் ஏற்காது. சிஐடியு சங்கம் தான் கேங்மேன் ஊழியர்களுக்கு பணிப்பயிற்சி கொடுத்தது. ஆண்களுக்கு மட்டுமின்றி மின்கம்பம் ஏறும் பயிற்சியை பெண்தொழிலாளர்களுக்கும் கொடுத்தது மின்ஊழியர் மத்தியமைப்புதான் என்பதை நினைவுபடுத்துகிறேன். மின்வாரியத்தில்  72 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சாதனை படைத்தது சிஐடியு.  தனியார்மயத்திற்கு எதிராகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் மின்ஊழியர்மத்திய அமைப்பு தொடர்ந்து போராடும் என்றார்.

வாலிபர் சங்கத்தின் மாநிலச்செய லாளர் எஸ்.பாலா பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் சொற்ப இடங்களை உள்முக தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் பூர்த்தி செய்துவிட்டு 60 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.இந்நிலையில் 5ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 15ஆயிரம் பேர் உடற்தகுதி தேர்வில் வெற்றிபெற்ற னர்.  இவர்களுக்கான எழுத்துத்தேர்வில் 14954 பேர் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவுகள் 2020 மே-22 அன்று வெளியிடப்பட்டது. இவர்கள் கடந்த 9 மாதகாலமாக பணி நியமனத்துக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்றார்.

மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார் பேசுகையில்,

கடந்த 2020 மார்ச் மாதம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி,கேங்மேன் பணிகளில் ஏற்கனவே இருக்கக்கூடிய 5ஆயிரம் பணியாளர்களுடன் கூடுதலாக 5ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். ஆனால் இன்று வரை ஒரு பணியிடம் கூட நிரப்பவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள்  பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை  தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியே என வாலிபர் சங்கம் குற்றம் சாட்டுகிறது என்றார்.    

பேரணி நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலசந்திரபோஸ், கே.எஸ். கார்த்தீஸ்குமார், சுசீந்திரா, நந்தன்,ஜோதிபாசு, பிரியசித்ரா, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், சுரேஷ், வடசென்னை மாவட்டச்செயலாளர் சரவணத் தமிழன்,  மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன்,மஞ்சுளா, சலாவுதீன்(திருவாரூர்), ஏசுராஜா (தஞ்சை), தேவேந்திரன் (திருவள்ளூர்) மற்றும்தேர்வு செய்யப்பட்டு பணிவழங்கப்படாத இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

;