tamilnadu

img

மின் கட்டணக்கொள்ளைக்கு சிபிஎம் எதிர்ப்பு...

சென்னை:
மின் கட்டணக்கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 26 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை முதல்வருக்கு மனு அனுப்பும் இயக்கம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை  அமலாக்கி வருகின்றன. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே  மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது.

மேலும், மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாயை விட மிகவும் கூடுதலாக உள்ளது.ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து  கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்டணத்தை குறைத்து உள்ளன. எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் தொகையை அரசே ஏற்றுக்கொள்க!
எனவே, கொரோனா காலத்திற்கு முன்பு  மின்நுகர்வோர் எவ்வளவு தொகையை மின்கட்டணமாக செலுத்தியிருந்தார்களோ அதே தொகையைதான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக உள்ள தொகையை  மின்நுகர்வோர்களுக்கு நிவாரணமாக  வழங்குகிற முறையில்  அரசே  அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் செலுத்தியிருந்த தொகையை விட, கொரோனா காலத்தில் கணக்கிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு கூடுதலாக உள்ளதோ அந்த தொகையை தமிழக அரசே  ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.   ஒருவேளை மின்நுகர்வோர் ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தியிருந்தால், கூடுதலாக செலுத்தியுள்ள அந்த தொகை வரக்கூடிய காலத்தில் சரிசெய்யப்பட வேண்டும். இதனால் தமிழக மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டால் அதை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மின்நுகர்வோர் சார்பிலும் தமிழக முதல்வருக்கு 2020, ஜூன் 26 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மனு அனுப்பும் இயக்கத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான படிவங்கள் அச்சிட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகித்து அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் வழியாக மனுக்கள் அனுப்பி வைக்கப்படும். இணைய வசதி உள்ள இடத்தில் ஆன்லைன் மூலமாகவும்  அனுப்பி வைக்கப்படும். இந்த மாபெரும் இயக்கத்திற்கு அனைத்து மின்நுகர்வோரும், பொதுமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;