tamilnadu

img

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு :உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு மையத்தில் குளறுபடிகள் குறித்தும்,  மாணவர்கள் விண்ணப்பித்த தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு  எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கான அறிவிக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வுகளில் 156 மாணவர்களின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தி பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1060 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இப்படியாக ஒத்திவைக்கப்பட்ட கணினி வழி தேர்வினை நடத்திட 2021 அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை நடத்திட ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டு ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து நீதிமன்றம் அத்தேர்வை ரத்து செய்து மறுபடியும் தேர்வு நடத்தப்படுவதைக் காரணம் காட்டி, ஒவ்வொரு தேர்வருக்கும், தேர்வு நடக்கும் இடத்தை மனம் போன போக்கில் மாற்றி வெவ்வேறு மாவட்டங்களுக்கு போட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் பல தேர்வர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் போன்ற தென்மாவட்டங்கள் தேர்வு மையமாக போட்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் போடப்பட்டுள்ளது. அதே போல் தென் மாவட்டங்களில் இருக்கும் தேர்வர்களுக்கு, வட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு இடங்களில் போடுவதால் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அலைச்சலும், பொருளாதார இழப்புகளும் தான் ஏற்படும். அறிமுகம் இல்லாத மாவட்டத்தில் போடுவதால் தேர்வுக்கு முந்தைய நாளே சென்று அருகில் எங்காவது தங்க வேண்டும்; கூடவே பெற்றோர்கள் செல்ல வேண்டும்; குறிப்பாக மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில், எந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டுமென்பது தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதும் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நீட் தேர்வுக்கு உடை கட்டுப்பாடுகளுடன் மாணவர்களை ஒன்றிய அரசு அலைக்கழித்து கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இதே தவறை செய்கிறது. இதனால் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையீடு செய்து, தேர்வர்கள் சிரமத்தை கணக்கில் கொண்டு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்தி வைத்து விட்டு, குறைகளை சரி செய்த பிறகு, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு தேர்வரும் குறிப்பிட்டிருக்கும் தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

;