tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் முன்னோடி தோழர் ஜி. மணி காலமானார்.. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி....

சென்னை:
கிராமப்புற உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு  அயராது போராடிய, செங்கொடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான  தோழர் ஜி. மணி காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

கிராமப்புற உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அயராது போராடிய செங்கொடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான, தோழர்களால்  ஜி.எம். என்று அன்போடு அழைக்கப்பட்ட  தோழர் ஜி. மணி (72) அவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

தோழர் ஜி. மணி அவர்கள் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம், இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் பிறந்து மாணவப்பருவத்திலேயே கம்யூனிச இயக்கத்தில் இணைந்தவர்.  1971-72ல் சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி பிறகு கட்சியின் முடிவின் அடிப்படையில்  முழுநேர ஊழியராக பணியாற்ற பொன்னேரி பகுதிக்கு அனுப்பப்பட்டார். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களில்  சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு மனைப்பட்டா இயக்கத்தை முன்னெடுத்து வீடற்ற மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா பெற்றுத் தந்து வெண்மணி நகர், பி. ராமமூர்த்தி நகர் உருவாக்கி கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியவர். இதன் மூலம் எண்ணற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு கட்சிக்குள் கொண்டு வந்தவர்.

உழைக்கும் மக்களின் நலன்களுக்காக அரசு அலுவலகங்கள் முன்பு தினசரி பல்வேறு போராட்டங்களை நடத்தி அதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டவர். 1990-க்குப் பிறகு அறிவொளி இயக்கம் தொடங்கிய போது அதற்கு பொறுப்பாளராகஇருந்து பல ஊழியர்களை அடையாளங்கண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கொண்டு வந்ததில் முக்கிய பங்களிப்பு செலுத்தியவர். 1982இல் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்த பிறகு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும்,  1995 இல் திருவள்ளூர் மாவட்டக்குழு பிரிந்த போது அதன் முதல் மாவட்டக்குழு செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, கரும்பு விவசாயிகளை அணி திரட்டி அவர்களை சங்கத்தில் அமைப்பாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர்.  கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் பொதுத்துறைசர்க்கரை ஆலைகளை அரசு மூடுவதற்கு முயற்சித்த போது அதனை எதிர்த்து பலகட்டபோராட்டங்கள் நடத்தி சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து இயங்குவதற்குபாடுபட்டவர். 

அதேபோல, மாநில அரசு தன்னிச்சையாக கரும்பு விலையை அறிவிக்கக் கூடாது, கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் கண்டவர் தோழர் ஜி.மணி.  அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று தனது அயராத உழைப்பினால் ஏழை, எளிய கூலி விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியதிலும், அவர்களை அணி திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதன் சட்டத்திட்டங்களை எளிய மக்களுக்கு எடுத்துரைத்ததிலும், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களில் அவர்களை அணிதிரட்டியதிலும் முன்நின்றவர். தன்னை தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளில் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த சட்டங்களை கற்றுத் தேர்ந்து அதன் மூலம் கோரிக்கைகளை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதிலும், அதில் வெற்றிபெறுவதிலும் திறமை படைத்தவர்.

தலைவர்களை உருவாக்கிய தலைவர்
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இயக்கத்தின் மதிப்புமிகு தலைவராக தனது 50 ஆண்டுகால அரசியல் பணியில் எண்ணற்ற தலைவர்களை உருவாக்கிய தலைவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக,  கரும்பு விவசாயிகள் சங்கத்தின்மாநிலச் செயலாளராக,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக,  அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினராக என அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றியவர்.  தனது இறுதி மூச்சு வரை கம்யூனிச லட்சியத்தோடும்,
அர்ப்பணிப்பு உணர்வோடும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டவர். கட்சித் தோழர்களிடம் எளிமையாக பழகும் குணம் படைத்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உழைக்கும் வர்க்கத்தினருக்கும், குறிப்பாக, கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது வீர வணக்கத்தையும், புகழஞ்சலியையும் செலுத்துகிறது.தோழர் ஜி.மணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி தோழர் கீதா அவர்களுக்கும் மகள் சித்ரா, மகன் தினேஷ் மற்றும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு
தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்
தோழர்  ஜி.மணி மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட், விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

;