tamilnadu

கோயம்பேடு மார்க்கெட் திறப்பு: அரசு பதிலளிக்க உத்தரவு...

சென்னை:
கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறக்கக் கோரிய  மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவியதால், அங்கு இயங்கிய காய் கனிகள் மற்றும் பூ அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.

இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர்   எம்.செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக் கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சில்லரை விற்பனைக்கு அனுமதியளித்ததே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும்,  பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என  தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, காய்கறி அங்காடியில்  சில்லரை விற்பனைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும், மனுவுக்கு டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.