tamilnadu

img

இந்நாள் ஜன. 23 இதற்கு முன்னால்

1957 - ஃப்ரிஸ்-பீ என்று தற்போது அழைக்கப்படும், வீசி விளையாடும் தட்டுக்கான தயாரிப்பு உரிமத்தை, வாம்-ஓ நிறுவனத்திற்கு, வால்ட்டர் மோரிசன் விற்றார். உண்மையில், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே, தட்டு வடிவப் பொருட்களை மனிதர்கள் வீசிவந்திருக்கிறார்கள். வேட்டையாடும் ஆயுதமாகவும், கூழாங்கற்கள்போன்று நீரினால் முனை மழுங்கிய கற்களை விளையாட்டிற்கும் மனிதர்கள் வீசியிருக்கிறார்கள். பண்டைய ஒலிம்பிக் போட்டிகளிலேயே வட்டு எறிதல் இடம்பெற்றிருந்திருக்கிறது.

பிற்காலத்தில் தொப்பிகள், மூடிகள் உள்ளிட்டவற்றை வீசி விளையாடியிருக்கிறார்கள். 1937இல் மோரிசனும்,  அவர் காதலியும் ஒரு காலி பாப்கார்ன் டின்னின் மூடியை வீசி கடற்கரையில் விளையாடியபோது, அங்கிருந்த மற்றவர்கள் அதை 25 செண்ட்(கால் டாலர்) விலைகொடுத்து வாங்கிக்கொண்டனர். 5 செண்ட்டுக்கு வாங்க முடிந்த மூடிக்குக் கடற்கரையில் 25 செண்ட் கிடைக்குமென்றால், அதை வியாபாரமாகவே செய்யலாம் என்று இறங்கிவிட்டார் மோரிசன். இரண்டாம் உலகப்போரில் விமானியாகப் பணியாற்றச்சென்று, சிறிது காலம் போர்க்கைதியாகவுமிருந்த மோரிசன், ஊர் திரும்பியவுடன், காற்றில் அதிகத் தொலைவு பறக்கும்வகையில் ஒரு தட்டை வடிவமைத்து, புகழ்பெற்ற பந்தயக் குதிரையின் பெயரான விர்லோ-வே என்பதையும் சூட்டினார்.

1948இல் நண்பருடன் சேர்ந்து பிளாஸ்ட்டிக்கில் தயாரிக்கத் தொடங்கியதுடன், அப்போது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்ததால், ஃப்ளையிங்-சாசர் என்று பெயரிட்டார். 1955இல் புதிய வடிவமைப்பை உருவாக்கி, ப்ளூட்டோ ப்ளேட்டர் என்று பெயரிட்ட மோரிசன், 1957இல் வாம்-ஓ-வுக்கு விற்றார். கல்லூரி மாணவர்கள் இதனை ஃப்ரிஸ்-பீ என்றழைப்பதையறிந்த வாம்-ஓ நிறுவனம்  அப்பெயரையே சூட்டியது. இந்நிறுவனத்தில் 1964இல் நியமிக்கப்பட்ட எட்வர்ட் ஹெட்ரிக், விளிம்பின் தடிமனை அதிகரித்து, சிறப்பாகக் கட்டுப்படுத்தத்தக்க வகையில் வடிவத்தை மாற்றியமைத்ததுடன், ஃப்ரிஸ்-பீ விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதையும் ஊக்கப்படுத்த, அது ஒரு விளையாட்டுத் துறையாகவே உருவானதுடன், விற்பனையும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.

இதனால் அவர் ஃப்ரிஸ்-பீ விளையாட்டின் தந்தை என்றழைக்கப்படுவதுடன், அவர் இறந்ததும் உடல் எரிக்கப்பட்டு, அச்சாம்பல் அடங்கிய சிறப்பு ஃப்ரிஸ்-பீகளும் தயாரிக்கப்பட்டன. அவரது உதவியுடன் டிஸ்க்-கோல்ஃப் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அதற்குத் தனியான தட்டு உருவாக்கப்பட்டதுடன், ஃப்ரிஸ்-பீயில் தொடங்கி, பின்னாளில் தனித்துவமான தட்டுகளை வீசி விளையாடுவதாக மாறிய பல்வேறு விளையாட்டுகள் இன்று விளையாடப்படுகின்றன.

- அறிவுக்கடல்

;