tamilnadu

img

மார்க்சிய ஆய்வாளர் கோவை ஞானி மறைவு

கோவை, ஜூலை 22–  மார்க்சிய ஆய்வாளரும் தமிழறிஞருமான கோவை ஞானி (86) புதனன்று காலமானார். கோவை ஞானி என்று அழைக்கப் படும் மார்க்சிய ஆய்வாளர் கி.பழனிச்சாமி (86)  கோவை மாவட்டத் தில் 1935ல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்ற இவர் கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும் மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்தார். தமிழ் மரபையும், மார்க்சியத்தையும் இணைத்து ஏராளமான மார்க்சிய நூல்களை படைத்துள்ளார்.  மேலும், 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள்,  5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள்  ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பா சிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

 தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.  கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட் டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலன் குறைவுற்றிருந்த அவர் புதனன்று கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மனைவி இந்திராணி ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு பாரி, மாதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்

தோழர் கோவை ஞானி மறை விற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு, தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு மற்றும் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறைவான தமிழாசிரியர் பணி யில் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியும், இறுதிக்காலம் வரையில் இடதுசாரி சிந்தனை யாளராகவும், மார்க்சிய ஆய்வு நூல்களை படைத்து அரும்பணியாற்றியவர். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் தோழமை களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர். 

தமுஎகச இரங்கல்

தமிழ் இலக்கிய சூழலில் தொடர்ந்து விவாத அலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்த  எழுத்தாளர் கோவை ஞானி மறைவு இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும் என்று தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்  செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.