கோவை, ஏப்.19 - கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரேனா வைரஸ் காரணமாக இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் இதுவரை 1,372 பேர் வரை வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரை சேர்ந்த 9 பேர் மற்றும் நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். அவர்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா ஆகியோர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். முன்னதாக குணமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் , செவிலியர்களை வெகுவாக பாராட்டினார்.
முன்னதாக , கோவையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2025 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இந்த மருத்துவமனையில் இருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுவரை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.