tamilnadu

புதிய சொல், பழைய தேடல் ‘அதலகுதலைமை’

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம், மத்திய அரசின் அரசாணையில் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் - 5 அன்று பிரதமர் நரேந்திர மோடி, அந்நிலையத்திற்கு PURATCHI THALAIVAR DR.M.G.RAMACHANDRAN CENTRAL RAILWAY STATION எனப் பெயர்ச்சூட்டியதற்குப் பிறகு இந்தியாவின் மிக நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் என்கிற சிறப்பைப் பெற்றது. அதே நேரத்தில் ஒரே ஒரு எழுத்தின் குறைவால் உலக பிரசித்தம் வாய்ப்பை இழந்திருக்கிறது. இப்பெயரின் மொத்த எழுத்துகள் - 57. 


இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட வெல்ஸ் என்கிற நாட்டில் Llanfairpwllgwyngyll நகர புகைரத நிலையத்தின் பெயர், LLANFAIRPWLLGWYNGYLLGOGERYCHWYRN DROBWLLLLANTYSILIOGOGOGOCH. இப்பெயரிடல் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மூன்று மொழிகளானது. இதன் மொத்த எழுத்துகள் 58. உலகில் வாசிப்பதற்கு கடினமான, நீளமான பெயர் கொண்ட புகைரத நிலையம் இதுதான். 


கேரள மாநிலம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மேனாள் மத்திய அமைச்சர் சசி தரூர்  ‘THE PARADOXICAL PRIME MINISTER - Narendra modi and his India’ (முரண்பாடான பிரதம அமைச்சர்) என்றொரு நூலை வெளியிட்டார். நரேந்திர மோடி, அவரது மெழுகுச் சிலையை அவரே ரசித்துக்கொள்ளும்படியான அட்டைப்படத்துடன் கூடிய இந்நூல் உலக கவனிப்பைப் பெற்றது. அந்நூலினை வெளியிடுவதற்கு முன்பு பிரபலப்படுத்தும் பொருட்டு தன் ட்வீட்டர் பக்கத்தில்


THE PARADOXICAL PRIME MINISTER, 400-page exercise in floccinaucinihilipilification எனப் பதிவிட்டிருந்தார். 


வாசகர்கள் அந்நூலினை வாங்கி வாசிக்க, அந்நூலில் அச்சொல் இல்லாமல் இருந்தது. மறுநாள், தன் ட்வீட்டர் பக்கத்தில்  Hippopotomonstrosesquipedaliophobia (ஹிப்போபொடோமான்ஸ்ட்ரொஸஸ்குப்பிட்அலியோஃபோபியா) என்கிறச் சொல்லைப் பதிவிட்டு வருத்தம் தெரிவித்தார். இச்சொல்லின் பொருள் - ‘நீளமான சொற்களைக் கண்டு பயங்கொள்ளுதல்’ (FEAR OF LONG WORDS).

சரி, தமிழில் இப்படியானச் சொல்லுக்கு என்னப் பெயர்? 


வம்சமணி தீபிகை , கி.பி 803 ஆம் ஆண்டு முதலான எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பேசும் நூல். இந்நூலின் மூலப்பிரதியில், தொடக்கம் முதல் பத்தி முடியும் வரை இடைவெளி, நிறுத்தக்குறியீடின்றி ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணி புரிந்த சுவாமி தீட்சிதர்.


ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த ‘அபிதான சிந்தாமணி ‘ யில் சோழனும் தேவியும் என்கிற தலைப்பில் நான்கு நீளமான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘காடுமீனம்படக்கண்டநங்கண்டன்வேற்’, ‘கோடுமேயுந்துறைத்தொண்டியிக்கோனகர்’,‘தேடுநீடுங்கொடிதெரியநாமுய்யவந்’, ‘தாடுமேபாடுமேயன்னமேயின்னமே’. இவை நான்கும் கூட்டுச் சொற்கள்.


‘நானாதேசத்துத்திஸையாயிரத்தைந்நூற்றுவர்’ - தமிழும் வடமொழியும் கலந்த நீளச் சொல்.

‘எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்’ 


திருச்சிற்றம்பலக்கோவை இவ்வகை இலக்கணத்தில் எழுதப்பட்டது. இலக்கணத்தில் ‘பா’க்கள் நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா. ஒவ்வொரு ‘பா’விற்கும் மூன்று இனங்கள் - துறை, தாழிசை , விருத்தம்.


‘மாந்தளிர்மேனிநெடுமென்பணைத்தோள்குறுந்தொடிமகளிர்’. பரிபாடலில் இடம் பெற்ற நீள்சொல் இது. பத்து தனி அடிச்சொற்களாலான தொகைச்சொல் இது: மா, தளிர், மேனி, நெடு, மென், பணை, தோள், குறு, தொடி, மகளிர்.

‘கவலுமனமிங்கெனக்குவாய்த்தலிங்கென்னே’ - (கம்பராமாயணம்)

செந்தமிழ் சொல்பிறப்பியல் அகராதியில் ‘உருசகதேந்திரியோபாதனபூதங்கள்’ என்கிற சொல் இடம்பெற்றுள்ளது.


தமிழ்ச்சொற்கள் ஏழு, எட்டு எழுத்துகளைத் தாண்டாது என்கிறது தமிழ் இலக்கணம். ஆனால் கலித்தொகையில் இடம் பெற்ற ‘ உரைக்கலத்தவர்’ என்கிற சொல்லின் மொத்த எழுத்துகள் - 9. இச்சொல்லைப் பிரித்தால் வேறொரு பொருளைத் தரவல்லது. இதன் பொருள் - ஒருவர் பேச்சாற்றமிக்கவராக இருந்தும் உறவினரிடம் சென்று தன் ஏழ்மையைச் சொல்லி உதவிக் கேட்க இயலாதவர்.


மனிதனின் மிக நீளமான கற்பனைத் தூரம் - சுவர்க்கத்திற்கும் நிரயத்திற்குமானத் தூரம். இதில் சுவர்க்கம் என்பது வானத்திற்கு மேலேயும், நிரயம் என்பது அதலபாதாளத்திலும் உள்ளது என்பது கற்பிதம்.அதலம் என்பதற்கு முடிவில்லாத, கீழுலகம், பள்ளம், நிரயம் , அச்சமூட்டும்படியான ஆழம்,... எனப் பல பொருளுண்டு. குதலை - குழப்பானச் சொல், மழலைச் சொல்; குதலமை - பொருள் புரியாமை, தளர்ச்சி, நடுக்கம்.


இவ்விரு சொற்களாலான மூன்று சொற்கள் - ‘அதலகுதலம்’ , ‘அதலகுதலை’, ‘அதலகுதலமை’.அதலகுதலம் - பெருங்குழப்பம்; அதலகுதலை - அச்சமூட்டும் குழப்பச் சொல் .

இதிலிருந்து, நீளமானச் சொற்களைக் கண்டு பயங்கொள்வதை ‘அதலகுதலைமை’ என்று சொல்லலாம்.


;