tamilnadu

img

கூடைப்பந்து விளையாட்டில் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்

வாய்ப்பு கிடைத்தால் வானமும் வசப்படும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர் அரசுப்பள்ளி மாணவிகள். வறுமையில் உழலும் மாணவிகளின் விளையாட்டு திறமையை அறிந்து வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர் ஸ்டிக்கர் கடை நடத்தும் வியாபாரி என்பது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதி மதம் கடந்து, ஏழை பணக்காரன் பேதமின்றி சக மனிதனை, மனிதனாகப் பார்க்க வைப்பது விளையாட்டு. அடிப்படை ஒழுக்கமும், ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தால் போதும் சாதாரண மனிதனையும் சாதனைமனிதனாக்கும் விளையாட்டு ஏழைகளுக்கான அட்சய பாத்திரம், என்பதை உழைக்கும் வர்க்கத்தினரின் குழந்தைகளுக்கு உணர்த்தி வருகிறார் செபாஸ்டியன் பிரபு. கோவை கால்நடை மருத்துவமனை அருகே ஸ்டாம்ப் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் கடையை நடத்தி வருபவர் செபாஸ்டியன் பிரபு. கூடைப்பந்து பயிற்சியாளரான இவர் தனது திறமையை பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்தாமல், திறமையுள்ள விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என எண்ணினார். அதுவும் அரசுப்பள்ளி மாணவர்களை சாதனை மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூடைப்பந்து என்கிற ஒரு விளையாட்டையே கண்டிராத கோவையில் உள்ளதுணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுந்தார். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இதுதான் கூடைப்பந்து என அறிமுகப்படுத்தும்போது மிரட்சியோடு கண்ட குழந்தைகள் இன்று சாதனைப் பெண்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். 

குழந்தைகள் விளையாடுவதற்கு சூ(காலணிகள்) மற்றும் விளையாட்டு உபகரணங்களை தனது ஸ்டிக்கர் கடையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாங்கி கொடுத்து கூடைப்பந்தாட்ட பயிற்சிக்கு வரவழைத்து இருக்கிறார். இவரது விடா முயற்சியும், குழந்தைகளின் ஆர்வமும், உழைப்பும் தற்போது கூடைப்பந்து போட்டியில் தமிழக அளவில் துணி வணிகர் சங்க பள்ளியை பேச வைத்திருக்கிறது. இவரது மாணவி ஸ்ரீலட்சுமி, இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான பெண்களுக்கான சப்-ஜீனியர் கூடைப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி இரண்டாம் இடம் பெறுவதற்கு அணிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். மேலும் இப்பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் கோவை மாவட்ட அணிக்காக தமிழக அளவில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையேயான சப் ஜினியர் பெண்கள் கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடி இரண்டாமிடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து செபாஸ்டியன் பிரபு நம்மிடம் கூறுகையில், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையூட்டி பயிற்சி கொடுத்ததாக கூறினார். ஆரம்பத்தில் அரசு பள்ளி என அலட்சியமாக பார்த்தவர்கள், தற்போது துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விளையாடுகிறார்கள் என்பதற்காகவே பார்க்க வருகின்றனர். அரசு பள்ளி மாணவிகளாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விமானத்தை கீழே நின்று அண்ணாந்து ஆச்சர்யமாய் பார்த்த மாணவிகள் இப்போது அதில் பயணம் செய்து விளையாடுவது அவர்களது தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறது. ஜீனியர் தேசிய கூடைப்பந்து கழகம் (என்பிஏ) டெல்லியில் நடத்திய பயிற்சி முகாமில், துணி வணிகர் சங்க அரசுப்பள்ளி மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது பெருமையளிக்கிறது. மேலும் இவர்களுக்கு அமெரிக்கா சென்று பயிற்சி பெற என்பிஏ சார்பாக பாஸ்போர்ட் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு பள்ளி மாணவிகள் சர்வதேச அளவில் சாதிக்க இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கூறுகையில் அரசு பள்ளியில் கூடைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு பள்ளி மாணவிகள் சர்வதேச அளவில் மிளிர கடுமையாக முயற்சித்த செபாஸ்டியன் பிரபுவிற்கு உரிய முறையில் பயிற்சி அளிக்க சிறப்பு அனுமதியும், குழந்தைகளை போட்டிக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். எங்களின் கூடைப்பந்து மைதானத்தை மேம்படுத்த தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஒரு பயிற்சியாளரின் கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது வெற்றியை நோக்கி. விளையாட்டுவினையாகவில்லை இக்குழந்தைகளுக்கு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. தளராத உறுதியும், நேர்மையும், உழைப்பும் இருந்தால் இலக்கை எட்டலாம் என்பதற்கு செபாஸ்டியன் பிரபு உதாரணமாய் திகழ்கிறார்.

- அ.ர.பாபு