tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்


ஈரோடு, ஏப்.9-ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 8,334 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அந்தந்த தொகுதிகளில் செவ்வாயன்று துவங்கியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 2,213 வாக்குச்சாவடி மையங்களுக்கு 9,238 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு 10,624 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,348, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,210, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1513, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,400, தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 297 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,442, காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,421 என மொத்தம் 1,678 வாக்குச்சாவடி மையங்களுக்கு 8,334 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் பார்வையிட்டு வருகிறார்.


சட்ட விரோதமாக பாரில் மது விற்ற 4 பேர் கைது: 368 மதுபாட்டில்கள் பறிமுதல்ஈரோடு, ஏப்.9-மொடக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக 3 பார்களில் மது விற்ற 4 பேரை தேர்தல்


கண்காணிப்பு பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 368 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் ஆளுங்கட்சி துணையோடு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மொடக்குறிச்சி தாலுகா பகுதியில் நஞ்சை ஊத்துக்குளி, எழுமாத்தூர், கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் மற்றும் காவல்துறையினருக்கு புகார் வந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த பார்களை நடத்தி வந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.இதனால் இந்த பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்துவந்தனர்.தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த இந்த டாஸ்மாக் பார்களில் மது பானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து செவ்வாயன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில், பாரில் அதிரடி சோதனை நடத்தினார். அப்பொழுது மூன்று பார்களிலும் பெட்டி, பெட்டியாக மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு காவல்துறையினர் சட்டவிரோதமாக பார்களில் மது பானங்களை விற்றது தொடர்பாக பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ் (23), சஞ்சய் (23), பாண்டி (42), சின்னசாமி (42) ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 368 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர். ஆனால் இந்த பாரின் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







;