tamilnadu

img

தருமபுரியில் 80.49 சதவிகித வாக்குப் பதிவு

தருமபுரி, ஏப்.19-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் 80.49 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளது.சட்டமன்ற தொகுதி வாரியாக தருமபுரி-2,53,884, பாலக்கோடு-2,23,980, பென்னாகரம்-2,34,646, பாப்பிரெட்டிப்பட்டி-2,50,878, அரூர் (தனி)-2,33,018, மேட்டூர்-2,71,498 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1787 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட 120க்கும் மேற்பட்ட மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில், தமிழக காவல் துறையினர், கேரள மாநில காவல் துறையினர், சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படை வீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் என 2,600 பேர் ஈடுபட்டனர்.இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்.18) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்ததை காணமுடிந்தது.


காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு 8.4 சதவிகிதமாக இருந்தது. காலை 11 மணியளவில் 18.76 சதவிகிதமும், நண்பகல் 1 மணிக்கு 39.92 சதவிகிதமும் பதிவானது. இதைத்தொடர்ந்து, பிற்கல் 3 மணிக்கு 57.78 சதவிகிதமும், மாலை 5 மணி நிலவரப்படி சராசரியாக 74.03 சதவிகிதமும் பதிவானது.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு சதவிகிதம் சட்டமன்ற தொகுதி வாரியாக: பாலக்கோடு 85.63, பென்னாகரம் 83.72, தருமபுரி 79.87, பாப்பிரெட்டிப்பட்டி 80.26, அரூர் 82.08,மேட்டூர் 72.86 என சராசரி வாக்குப் பதிவு 80.49 சதவிகிதம் ஆகும்.வாக்குப் பதிவு நிறைவுற்றதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வியாழனன்று இரவு வாக்கு எண்ணும் மையமான செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்குபாதுகாப்புடன் வைக்கப்பட்டன.


சட்டமன்ற இடைத்தேர்தல் 


அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 86.96 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகள் உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 83.31 சதவிகித வாக்குகள் பதிவாகின.


;