tamilnadu

img

ஜுலை 15 வரை ‘நிபா’ கட்டுப்பாடுகள் தொடரும்

கண்ணூர்:
கேரள மாநிலத்தை அச்சுறுத்திய நிபா வைரஸ் தாக்குதலின்போது ஏற்பட்ட தீவிரமான சூழ்நிலையை சமாளித்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா ஆறுதல் தெரிவித்தார். எனினும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜுலை 15 வரை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கண்ணூரில் செய்தியாளர்களை சனியன்று (ஜுன் 15) சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: நிபா வைரஸ் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவரிடமிருந்து சேகரித்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. வேறு யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. நோயின் அறிகுறி உள்ளதாக கருதப்பட்டவர்களையும், கடுமையான காய்ச்சல் போன்றவற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்தவர்களையும் பரிசோதனை செய்ததில் நிபா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

அச்சம் விலகியது என்றுதான் கூற முடியும். ஆனால், மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை உடனடியாக முழு அளவில் விலக்க முடியாது. எர்ணாகுளத்தில் உள்ள குழு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது.வைரோலஜி ஆய்வகம் ஆலப்புழயில் உள்ளது. குரங்கு காய்ச்சல் பரி்சோதனை செய்ய வயநாட்டில் ஆய்வகம் உள்ளது. ஆனால், 3 மற்றும் 4 அளவீடுகளில் (level 3-4) உள்ள கணினிகளை பயன்படுத்தும் ஆய்வகங்களில் மட்டுமே இதுபோன்ற உயர்தர வைரஸ்களை பரிசோதனை செய்ய முடியும். அதனை நாட்டில் பரவலாக நிறுவ முடியாது. அதற்கு ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசின் அனுமதி தேவை. மத்திய அரசிடம் கடந்தமுறை அதற்கான அனுமதி கோரப்பட்டது. அனுமதி 2019 மே மாதம் கிடைத்துள்ளது. மூன்று கோடி ரூபாயும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மேலும் பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு இப்போதே கோழிக்கோட்டில் ஆய்வகம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நிபா வைரசின் இருப்பிடத்தை கண்டறிய ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வது சரியல்ல என அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் வெளியேறினால் இழப்பது மனித உயிர்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

;