tamilnadu

கணவரின் சடலத்தை மீட்டுத்தர அரசுக்கு மனைவி கோரிக்கை

கடலூர், ஜூன் 3- கேரளாவில் உயரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரு மாறு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பெரிகண்ணா டியைச் சேர்ந்தவர் வி.மதியழகன் (50). கூலி வேலைக்காக கேரள மாநிலம் சென்றார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மலப்புரம் மாவட்டம் திரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 31ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையிலிருந்து மதியழகனின் மனைவி நவநீதத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நவநீதம், மதியழகனின் அண்ணன் அரிகிருஷ்ணன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், மதியழகன் இறந்த பின்னர் அவருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே சடலத்தை வழங்க முடியும் என கேரள அரசு தெரிவிக்கிறது. கொரோனா  தொற்று இருந்தால் சடலம் அங்கேயே புதைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். எனவே கொரோனா தொற்று  இல்லாமல் இருந்தால் அவரது சடலத்தை பெரியகண்ணாடி எடுத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். இல்லையெனில் அவரது முகத்தையாவது பார்ப்ப தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

;