tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இயற்பியல் துறையின் 7 வகுப்பறைகள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்தில் புரொஜக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. 

இதனை மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். ஓஎன்ஜிசி (காவிரி படுகை) நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம் மோகன், பொதுமேலாளர் மணி, பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம்மோகன் “தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை மட்டும் எடுத்து வருகிறது. இதனால் இதுவரை எந்த பாதிப்பும் வந்தது இல்லை” என்றார்.

டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தமிழகத்தில் ஷேல் மற்றும் மீத்தேன் வாயுக்களை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியும் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இல்லை என்றும் அவர் கூறினார்.டெல்டா பகுதி உள்ளிட்ட பல இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளதா என்று நாங்கள் ஆய்வு செய்து சிலுவை வடிவ குழாய் அமைத்துள்ளோம். இதனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒற்றை உரிமம் எனும் அனுமதி வழங்கி இருந்தாலும், மத்திய அமைச்சகம் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பிச்சாவரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான அனுமதியும் இல்லை என்றும் அதிகாரி தெரிவித்தார்.

;