சென்னை, டிச. 6- குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என்பதால், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன வர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.