tamilnadu

img

உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டம்

ஈரோடு, ஜூலை 18- உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் மேற் கொள்ள இருந்த  நிலையில், போராட்டத்திற்கு முன்னரே காவல் துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தது விவசாயிகள் மத்தி யில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிட வேண்டும்; ஏற்கனவே மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடத்திற்கு உரிய வாடகையை விவசாயி களுக்கு வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும், உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு கூட்டமைப்பும் இணைந்து தொடர்ச்சி யாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது

இந்நிலையில் ஈரோடு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வியாழ னன்று (ஜூலை 18) காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சம்பத் நகர் பகுதியில் இருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் ஏ.எம்.முனுசாமி, எஸ்.ஆர்.மதுசூதனன், சிபிஎம்  மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், விவசாயி கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், சேலம் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என்.பெருமாள், கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, சேலம் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேல், பி.ஆர்.சண்முகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் பூபதி, முத்துசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சி.எம்.துளசிமணி, வி.பி.குணசேகரன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அராஜகமான முறையில் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.  மேலும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்களின் தலைவர்களை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல  இடங்களில் வீடு, வீடாகச் சென்று சோதனை யிட்டும் கைது செய்தனர். போராட்டத்திற்கு வரும்  விவசாயிகள் ஒவ்வொருவராக கைது செய்யப் பட்டு ஈரோடு மாநகர் பகுதியில் இருந்து 20கி.மீ. தொலைவில் உள்ள பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட விவசாயிகளை ஒரே இடத்தில் வைக்காமல், 8 இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைக்கப் பட்டனர். இதனை எதிர்த்து கைது செய்யப்பட்ட விவசாயிகளும், விவசாயிகள் சங்க தலைவர் களும் மதிய உணவு  எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவசர நிலைக் காலமா?
 

முன்னதாக, இப்போராட்டத்தையொட்டி ஈரோடு மாநகர் முழுவதும் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  சிபிஎம் நிர்வாகிகளின் வீடுகளில் காவல்துறை யினர் அராஜகமான முறையில் சோதனை யிட்டனர்.  மேலும் சம்பத்நகரில் இருந்து ஆட்சி யர் அலுவலகம் செல்லும் சாலை முற்றிலும் அடைக்கப்பட்டது. அவ்வழியே செல்லும் பேருந்துகள் அனைத்தும் நசியனூர் சாலை யிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும் சம்பத் நகர் பகுதியில் உள்ள வீதிகள் அனைத்திலும் காவலர்களை நிறுத்தி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் முதல், வீடுகளில் வசித்து வரும் மக்கள் வரை அனைவரிடமும் விசாரணை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணிக்கு வழக்கம்போல் காலை 10 மணி அளவில் வந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வேறு பல சேவைகள் மற்றும் குறை களைத் தெரிவிக்க வந்த பொதுமக்களிடம், இன்று ஆட்சியர் அலுவல கம் செயல்படாது நாளை வாருங்கள் என அனைவரையும் காவல்துறையினர் திருப்பி அனுப்பி  அராஜகத்தில் ஈடுபட்டனர்.

வி.சுப்பிரமணியன் கண்டனம்

உயர்மின் அழுத்த  கோபுர எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை அராஜகம் அரங்கேற்றப்பட்டதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வி.சுப்பிரமணியன் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்மின் அழுத்த கோபுரங் களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், அமைக்கப்பட்ட இடத்திற்கு உரிய வாடகை வழங்கிடவும்,  மாற்றுப் பாதையில் (சாலையோரங்களில்) கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு கூட்டமைப்பும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தின.  இதில் பங்கேற்ற தலை வர்கள் மற்றும் விவசாயிகளை அராஜகமான முறையில் கைது செய்துள்ள ஈரோடு காவல்துறையையும், தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் உயர்மின் அழுத்த கோபுர பிரச்சனையில் உரிய முறையில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.  ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாண்ட ஈரோடு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர் மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (ஜூலை 18)  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.  ரவீந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச்செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்க டேசன், நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், அழகேசன், ஏ.வி.ஸ்டாலின்மணி, உதய குமார், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பி.செல்வன், எம்.ரவி, காமராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரை அராஜகமாக கைது செய்து இழுத்துச் சென்ற காவல்துறையினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஈரோட்டில் வியாழனன்று விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாத வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான போலீசாரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளையும், விவசாய சங்கத் தலைவர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், மாநில துணைத்தலைவர்கள் ஏ.எம். முனுசாமி, எஸ்.ஆர். மதுசூதனன் உள்ளிட்டவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, ஆடைகளை கிழித்துள்ளனர். அத்தோடு மட்டுமில்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் உள்ளே புகுந்துள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் டி. ரவீந்திரன் தலைமையில் போராடிய விவசாயிகளையும் கைது செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் இச்செயல்பாடு அறிவிக்கப்படாத அவசர கால நிலையாக தெரிகிறது. ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திட முயன்றவர்களை, போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறைகளை கையாண்ட காவல்துறையினரையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலிருந்து...