tamilnadu

img

ஊடக உரிமை என்பது...

சென்னை, ஜூலை 27- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஜூலை 26 அன்று இணையவழியில் ஊடக உரிமை மாநாடு நடத்தப்பட்டது. 500 பேர் நேரடியாக இணையவழியேயும் சமூக ஊடகங்களின் நேரலை வழியே பலரும் பங்கேற்ற இம்மாநாட்டின் நிகழ்வுகளை மதுக்கூர் இராமலிங்கம் ஒருங்கிணைத்தார். பத்திரிகையாளர் அ.குமரேசன் வரவேற்க, மூத்த வழக்கறிஞரும் எழுத்தாளருமான சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை வகித்த இம்மாநாட்டினை நீதியரசர் அரிபரந்தாமன் தொடங்கிவைத்தார். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிர சாத் வாழ்த்துரை வழங்கினார். ஊடக வியலாளர்கள் ஜென்ராம், கவின்மலர், ஹசிப் முகமது, ஜெனிஃபர், சோனியா அருண்குமார், மைனர் வீரமணி ஆகி யோர் ஊடகத்துறையின் இன்றைய சூழலை  விளக்கிப் பேசினர். பத்திரிகை யாளர் மயிலை பாலு முன்மொழிந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத வன் தீட்சண்யா நிறைவுரையாற்றி னார். ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் 2020 ஜூலை 26 அன்று இணையவழியில் ஊடக உரிமை மாநாடு நடத்தப்பட்டது. 500 பேர் நேரடியாக இணைய வழியேயும் சமூக ஊடகங்களின் நேரலை வழியே பலரும் பங்கேற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

ஊடக உரிமை என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக் கூறும் உரிமை, கருத்துக் கூறாதிருக்கும் உரிமை என அரசியல் சட்டம் வகுத்தளித்திருக்கும் அடிப்படை உரிமை சார்ந்தது. ஊடகமானது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று என்பதால் இந்த உரிமையின் மதிப்பு மேலும் கூடுதலாகிறது. ஆட்சியை நடத்திட சட்டமியற்றும் அமைப்புகளும் செயல்படுத்திட நிர்வாகமும் இருந்தால் போதுமானது.  ஆனால் ஆட்சியின் செயல்பாட்டை கண்கா ணிக்கவும் தவறு செய்யும்போது தயங்காமல் சுட்டிக் காட்டவும் தட்டிக்கேட்கவும் சுதந்திரமான  நீதித்துறையும் ஊடகத்துறையும் அவசியம். இவற்றிலும் நாடி வருவோ ருக்கு மட்டும் என்றில்லாமல் தேடிச்சென்றும் உண்மை களை மக்களுக்கு எடுத்துரைக்கும் மகத்தான பணியைச் செய்வது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே.

பன்முனைத் தாக்குதல்

ஊடகவியலாளர்கள் இன்று பன்முனை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவற்றில் ஒன்று கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகங்கள் செய்கின்ற பணிநீக்கம்; ஊதியக்குறைப்பு; ஊதியம் தராமல் இழுத்தடிப்பு, வேலைநேரம் அதிகரிப்பு. நிறுவன வளர்ச்சியா னது வெறும் முதலீட்டால் மட்டும் ஏற்படுவதல்ல; ஊழியர்க ளின் உதிரமும் வியர்வையும் சொந்த முயற்சியில் அவர்கள் ஈட்டியிருந்த அறிவும் கலந்ததுதான்  ஊடகத்தின் வளர்ச்சி. இலாபத்தின் பலன்களை அனுபவிக்கும் ஊடக நிறுவனத்தார் நஷ்டமெனச் சொல்லிக்கொண்டு ஊடகவியலாளர்களை வதைப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே பணிநீக்கம் ஊதியக்குறைப்பு போன்ற நடவடிக்கை களைத் திரும்பப் பெற்று ஊடகவியலாளர்களின் வாழ்வுரி மையைப் பாதுகாக்கவும் சுதந்திரமாக பணியாற்றும் விதமாக பணிச்சூழலை பேணவும் வேண்டுமென ஊடக நிறுவனங்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அதிகார மமதையில் ஆட்சியாளர்கள் 

தம்மீதான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆத்திரத்திலும் அதிகார மமதையிலும் ஆட்சியா ளர்கள் ஊடகத்துறையை  குறிவைப்பது என்பது இன்னொரு தாக்குதல். வழக்குப்போடுவது, கைது செய்வது,  சிறையில் அடைப்பது,  விளம்பரங்களை நிறுத்து வது போன்ற தாக்குதல்கள் கண்கூடாகத்  தெரிந்தவை.  ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி நடத்துவோரிடம் காணப் படும் இந்தத் தாக்குதல்களையெல்லாம் ஒன்றுமேயில்லை என்று ஒப்பிட்டுச் சொல்லுமளவுக்கான வகைகளிலும் வடிவங்களிலும் தற்போதைய மத்திய ஆட்சியின் ஒடுக்கு முறைகள் மூர்க்கம் பெற்றுள்ளன. 

மத்திய அரசின் தலைவர் என்கிற முறையில் பிரதமர் இந்த ஆறாண்டு காலத்தில் ஒருமுறைகூட அதிகாரப்பூர்வ மான செய்தியாளர் சந்திப்பை நடத்தவேயில்லை என்பதி லிருந்தே இவரது ஆட்சி எந்தளவுக்கு வெளிப்படைத் தன்மை அற்றது என்பது விளங்குகிறது. அதேவேளையில் இக்காலத்தில் ஊடகங்களின் மீதான அரசின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருத்துக்கு எதிர் கருத்தையோ  மாற்றுக்கருத்தையோ முன்வைக்காமல், முன்வைக்க முடியாமல் கருத்து கூறுவதையே முடக்குவதற்கும் அழிப்ப தற்கும் அரசின் பல்வேறு நிறுவனங்கள் ஏவப்படுகின்றன. சட்டப்பூர்வமான இந்தத் தாக்குதலை அரசு நடத்தும் அதேவேளையில் ஆளுங்கட்சியின் தாயமைப்பான சங்பரி வாரத்தினர் சட்டவிரோதமாக ஊடகத்துறையினர் மீது பல்வேறு விதமான தாக்குதல்களைத் தொடுத்து வரு கின்றனர். 

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் விவாதங்களில் அவர்களது பிரதிநிதிகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவமும் கூடுதல் நேரமும் ஒதுக்குவது, குறுக்கீடும் விமர்சனமு மின்றி அவர்களது அபத்தமான நச்சுக்கருத்துகளை வெளி யிடுவது, மாற்றுக் கருத்துகளை மறைப்பது அல்லது திரிப்பது ஆகிய வழிகளில் சங்பரிவாரத்தின் ஊது குழல்களாக மாறிக் கொள்ளும்படி ஊடக நிறுவனங்க ளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நெருக்கடி இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. 

ஆத்திரத்தின் உச்சத்தில் காவிக்கூட்டம்

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை முழுமையாக தனது நேரடி  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்ல சங்பரிவாரம் முயற்சிக்கும் இந்தக் கட்டத்தில் தனது கருத்தியலை விமர்சிக்கக்கூடிய எவரொருவரையும் விட்டுவைக்காமல் விரட்டி விட்டு அவர்களினிடத்தில் தமது ஆதரவாளர்களை நிரப்பிட முயற்சிக்கிறது. அதற்காக அது நன்மதிப்பு பெற்ற ஊடகவியலாளர்களை அவதூறு செய்வது, அவர்களது ஊடகச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை ஐயத்திற்கு ரியதாக்குவது, தனிப்பட்ட விசயங்களைத் திரித்து பொது வெளியில் ஆளுமையைச் சிறுமைப்படுத்துவது, பெயர் குறிப்பிட்டு மிரட்டுவதுடன் அவர்களது குடும்பத்தினரை  கொச்சைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, சுயதணிக்கைக்கான நெருக்கடியை உருவாக்குவது போன்ற கெடுவழிகளை மேற்கொண்டுள்ளது. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் மீதான காவிக்கும்பலின் ஒவ்வாமையானது, இந்தக் கருத்தியல்கள் மீது ஈர்ப்புகொண்டவரை அல்லது அத்தகைய குடும்பப் பின்புல முள்ள வரை ஊடகத்தில் நீடிக்கவிடாமல் அப்புறப்படுத்து வது என்கிற கொடூர நிலை வரை செல்கிறது.  இதே வெறுப்பு பெண் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தவர் ஊடகத்துறையில் நுழைவதையும் நீடிப்பதையும் தடுக்கிறது. அரசு மற்றும் அதன் ஆதரவு பெற்றவர்களின் இவ்வாறான போக்கினால்தான் ஊடகச்சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை தொடர்பான உலகளாவிய கணக்கெடுப்புகளில் இந்தியா தொடர்ந்து பின் தங்கி மதிப்பிழந்து வருகிறது என்று இம்மாநாடு குற்றம்சாட்டுகிறது. 

ஊடக நிறுவனங்கள்  செய்வது சரியல்ல

நாட்டின் பன்முகத்தன்மையை முன்னிறுத்துகிற – அரசியல் சாசனத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கிற- அதிகாரத்தின் ஊதுகுழலாக அல்லாமல் மக்களின் குரலாக இருந்து ஜனநாயகப் பணியினை ஆற்றி வருகிற ஊடகவியலாளர்களை பணியிலிருந்து வெளி யேற்றுவதும் வெளியேறிச் செல்லும்படியான நெருக் கடியை உருவாக்குவதும் பொறுப்பிறக்கம் செய்வது மான ஆபத்து தமிழக ஊடகங்களிலும் பரவிக் கொண்டி ருக்கிறது. சங்பரிவாரத்தின் மிரட்டலுக்குப் பயந்தோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ தனது மதிப்பார்ந்த ஊடகவியலாளர்களை இவ்வாறு கைவிடும் ஊடக நிறுவனங்களின் போக்கினை இம்மாநாடு ஒருமனதாக கண்டிக்கிறது. 

அச்சு, காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு முன்னேறிவிட்டதாக கருதி,  சங்பரிவாரமும் மத்திய அரசும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழி கருத்துருவாக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்குத் துணிந்துள்ளன. இவ்வாறான தளங்களில் செயல்படு பவர்களை குறிவைத்து மிரட்டுவது, தாக்குவது, புகார ளித்து அவர்களது ஊடகக்கணக்குகளை முடக்குவது, கைதுசெய்து  இணையப்பக்கங்களை முடக்குவது என அட்டூழியம் தொடர்கிறது. இந்தவகை ஊடகங்களையும் ஒடுக்குவதற்கு சட்டவடிவம் கொடுக்கும் விதமாகவே “பத்தி ரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுச்சட்டம் 2019” என்கிற திருத்தம் வரவுள்ளதாக இம்மாநாடு கருதுகிறது. ஊட கத்துறைக்கு இவ்வாறு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்த லானது, ஜனநாயகத்தைத் தாங்கும் இதர தூண்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அழிமானத்தின் வெடிமுனை என்பதை இம்மாநாடு கவனத்தில் கொள்கிறது. அதனா லேயே ஜனநாயகத்தின் மீது விருப்பார்வம் கொண்ட யாவரும் ஊடகச்சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

;