tamilnadu

img

பாஜக ஆளும் உபியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன- தேசிய குற்ற பதிவு ஆணையம்

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள உத்திரபிரதேசத்தில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3வது முறையாக அதிகரித்துள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 
தேசிய குற்றப்பதிவு ஆணையம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என கொலை, வன்புணர்வு, வரதட்சணை மரணம், தற்கொலை செய்தல், ஆசிட் தாக்குதல், பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கடத்தல் போன்றவற்றை வகைப்படுத்தி உள்ளது.  

2015 ஆம் ஆண்டில், பெண்கள் மீதான குற்றங்களில் 3.2 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், 2016 ல் 3,38,954 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக  2017ம் ஆண்டில் நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
ஒரு வருடத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்  56,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 31,979 வழக்குகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது, மேற்கு வங்கத்தில் 30,992, மத்திய பிரதேசத்தில் 29,778, ராஜஸ்தானில் 25,993 மற்றும் அசாமில் 23,082 வழக்குகள் பதிவாகியுள்ளன. 
தலைநகர் தில்லியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சரிவைக் கண்டது. 2017 ஆம் ஆண்டில் 13,076 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 2016 ல் 15,310 ஆகவும், 2015 ல் 17,222 ஆகவும் குறைந்துள்ளது என்று என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவித்துள்ளது. 
அருணாச்சல் பிரதேசம், கோவா, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மிசோரம், நாகாலாந்து சிக்கிம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் மூன்று இலக்கங்களில் மட்டும் குற்றங்கள் பதிவாகி உள்ளது. இது அகில இந்திய புள்ளி விவரங்களில் ஒரு சதவிகிதம் கூட இல்லை என்று தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் யூனியன் பிரதேசங்களில், சண்டிகரில் 453 வழக்குகளும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 132, புதுச்சேரியில் 147, டாமன் மற்றும் டையூவில் 26, தாத்ரா மற்றும் நகர்ஹவேலியில் 20 வழக்குகளும், லட்சத்தீவில் ஆறு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மத்திய உள்நாட்டு விவகார அமைச்சின் கீழ் உள்ள என்.சி.ஆர்.பி., இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நாட்டின் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்ட குற்றத் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.
 

;