tamilnadu

img

2011 கணக்கெடுப்பின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,டிச.11- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி திமுக மற்றும் தோழமைக் கட்சி கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த மனுக்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட பத்துக்கும்  மேற்பட்ட மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் மாவட்ட ஊராட்சி தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையை கூட மாநில தேர்தல் ஆணையத்தால் கூற முடியவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார். அப்போது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுகவுக்கு சம்மதமா? என்று கேள்வி எழுப்பினார். இதைத் தான், தங்கள்  தரப்பில் தொடர்ந்து வலியுறுத்துவதாக திமுக வழக்கறிஞர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்  களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவி களுக்கு தேர்தல் நடத்த தடையில்லை; புதிய அறிவிப்பாணையின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்; 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மு.க.ஸ்டாலின் பேட்டி 
இந்நிலையில் புதனன்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2011 மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். அதை ஏற்று உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது என்றும் தேர்தலைக் கண்டு திமுக அச்சப்படவில்லை; எப்போது தேர்தல் நடத்தினாலும் தயாராக இருக்கிறோம் என்றும் தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு கிடைத்த மரண அடி என்றும் கூறினார்.

;