tamilnadu

img

மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 3 ஈரோட்டுப் பாதை - என்.ராமகிருஷ்ணன்

பெரியார் கேட்டுக் கொண்டபடி மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் ஒரு அற்புதமான வேலைத் திட்டத்தை சுயமரியாதை இயக்கத்திற்கு எழுதிக் கொடுத்தார். சாராம்சத்தில் அது கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் போன்றே இருக்கும்.  ஈரோட்டுப் பாதை என்று அந்நாட்களில் மிகவும் புகழப்பட்ட அந்த ஈரோட்டுத் திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது: ஒன்று, சுயமரியாதை இயக்க லட்சியம். மற்றொன்று வேலைத்திட்டம். லட்சியம் என்பது இங்கிலாந்து உள்ளிட்ட எல்லாவித முதலாளித்துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது; தேசத்தின் அனைத்து கடன்களையும் ரத்து செய்வது; ரயில்வே, வங்கிகள், நீர் வழிப்பாதை சாதனங்களை மக்கள் உடைமையாக்குவது; தரிசு நிலங்கள், காடுகள், ஸ்தாவர சொத்துக்களை மக்கள் உடைமையாக்குவது விவசாயிகளும், தொழிலாளிகளும் வட்டிக்காரர்களுக்கு, கடன்காரர்களுக்கு தரவேண்டிய கடன்களை ரத்து செய்வது; அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்வது; சுதேசி சமஸ்தானங்கள் உள்ளிட்டு இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வருவது; ஏழு மணி நேர வேலைநாள், கூலி உயர்வு உள்ளிட்டவையாகும். வேலைத்திட்டம் என்பது நாட்டு மக்களை பொருளாதாரக் கொடுமை, சாதிமதக் கொடுமையிலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாக்கும் பொருட்டு மக்கள் அவசியத்திற்கான தொழில் முறைகள்; போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றின் நிர்வாகத்தையும், லாபத்தையும் தனிநபர்கள் அடையாமல் இருப்பதற்கு வேண்டிய காரியங்களை அரசியல் அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும்; மாவட்ட சபை முதல் சட்டமன்றம் வரை வயது வந்தோர் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுதல்; விவசாயத் தொழிலாளிகளுக்கு நியாயமான பங்கு; மத அமைப்புகளின் வருவாயை மக்களுக்காகப் பயன்படுத்துதல்; அரசாங்க ஆவணங்களில் சாதி, மதப் பிரிவுகள் குறிக்காதிருத்தல்; உள்ளாட்சிகள் மூலம் போக்குவரத்து, வீட்டுவசதி, பால், வைத்திய வசதிகளைச் செய்து தருவது; தேர்தலுக்கு கட்சியின் பெயரால் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். வேட்பாளர்கள் கட்சித்திட்டத்திற்கு வாக்குறுதி அளித்தல்- போன்ற திட்டங்களை கொண்டது இந்த வேலைத்திட்டம். சிங்காரவேலர் எழுதிய இந்தத் திட்டம் பெரியாருக்கு கிடைத்ததும் அவர் அது குறித்து விவாதிக்க 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28,29 தேதிகளில் ஈரோடு நகரில் சுயமரியாதை தொண்டர்களின் கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் அதை விளக்கி சிங்காரவேலர் உரையாற்றினார். இந்தத்திட்டத்திற்கு பெரியாரின் நெருங்கிய நண்பரும், தமிழில் பெரியார் வாழ்க்கை வரலாறை எழுதியவருமான சாமி சிதம்பரனார் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுய மரியாதை இயக்கம் அரசியல் இயக்கமானால் அது சமூக சீர்திருத்த வேலையை சரிவர செய்ய முடியாது என்று அவர்கள் கூறினர். அதற்கு பெரியார் தரப்பில் தக்க பதிலும் கூறப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் சமூக சீர்திருத்தத்தை சீர் செய்யலாம் என்று கூறப்பட்டது. சுய மரியாதை இயக்கம் எப்போதும்போல் சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்து வரும் நேரத்திலேயே அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனி அரசியல் பிரிவை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இறுதியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஒருமனதாக ஈரோட்டுப் பாதையை  ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தத் திட்டத்தை விளக்கி பெரியார், சிங்காரவேலர் மற்றும் ஜீவா ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டைத் தொடர்ந்து பெரியாரும், ஜீவாவும், மாவட்டம் தோறும் ஈரோட்டுப் பாதையை விளக்கி மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்தி வந்தனர்.  இச்சமயத்தில் பெரியாருக்கு ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது. அவருடைய சமூக அரசியல் வாழ்க்கைக்கு பெரும் துணையாக இருந்த அவரது துணைவியார் நாகம்மாள் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி காலமானார். நாகம்மாள் பெரியாருடன் சேர்ந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்தவர். 

மகாத்மா காந்தி கள்ளுக்கடைக்கு முன்னால் மறியல் போராட்டம் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் ஊழியர்களுக்கு கட்டளையிட்ட பொழுது அதையேற்று பெரியார் தன் தோட்டத்தில் கள் இறக்குவதற்காக குத்தகைக்கு விட்டிருந்த 500 தென்னை மரங்களையும், ஒரே இரவில் வெட்டி வீழ்த்தச் செய்தார். அவர் துணைவியார் நாகம்மாளும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும், ஈரோட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் அவர்கள் ஆதரவாக திரண்டு விட்டனர். இதைத் தொடர்ந்து நாடெங்கும் இந்தச் செய்தி பரவி கள்ளுக்கடைகளுக்கு முன்னால் பெரும் மறியல் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. இதனால் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆப்காரி எனப்படும் கள்ளுக்கடை வரி குறைந்து போயிற்று. எனவே ஒரு பெரிய அரசாங்க அதிகாரி மகாத்மா காந்தியைச் சந்தித்து அந்த இயக்கத்தை நிறுத்தும் படி கேட்டுக்  கொண்டார். ஆனால் காந்தி சொன்னப் பதில் : அது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது!  நாகம்மாள் - கண்ணம்மாள் போராட்டம் அந்தளவுக்கு இந்தியாவில் பிரசித்தி பெற்றது.