tamilnadu

img

எடப்பாடி பழனிசாமி அரசின்  நாட்கள் எண்ணப்படுகிறது: கே.பாலகிருஷ்ணன்

இராமேஸ்வரம்:
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டம் சனிக்கிழமை  தொடங்கியது. இதில் அகில இந்திய துணைத்தலைவர்கள் கே.வரதராசன்,  கே.பாலகிருஷ்ணன் உட்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
காவிரியில் பத்து டிம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டது. இது குறித்து மத்திய அரசிடம் அதிமுக பேசவில்லை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது அதைப்பற்றியும் அதிமுக கவலைப்படவில்லை. தமிழக முதல்வர் தில்லி செல்லும் போது தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் அமைச்சர் பதவி பற்றி மட்டுமே பேசுவது தான் கடமையா? குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசிடமிருந்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் பெற்று நீர் நிலைகளைத் தூர் வார வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். 

 புதிய கல்விகொள்கை, எட்டு வழிச்சாலை, காவிரி பிரச்சனை, ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவை குறித்துப் பேச சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்; அல்லது அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களை அழைத்துப் பேச  வேண்டும்.இது தொடர்பாக வரும் 18-ஆம் தேதி தஞ்சாவூரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரிடம் இது குறித்துப் பேசி உள்ளேன். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலின்றி மீன்பிடிக்க இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் சேதமடைந்துள்ள இந்திய விசைப்படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  

திருநெல்வேலியில் வாலிபர் சங்க நிர்வாகி அசோக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியப் படுகொலை வழக்குகள் அனைத்திற்கும் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.தமிழக அரசுக்கு ஆபத்து உண்டா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  மத்திய அரசு தமிழக அரசைப் பாதுகாத்து வருகிறது. 11 சட்ட மன்ற உறுப்பினர்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்தத் தீர்ப்பு மாறாக வந்தாலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது தான் உண்மை என்றார். 

பேட்டியின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வி.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள், எம்.முத்துராமு, வி.மயில்வாகனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;