tamilnadu

img

இந்நாள் மே 21 இதற்கு முன்னால்

1922 - முதன்முதலாக ‘த்ரில் கொலை’யாக வகைப்படுத்தப்பட்ட கொலையை, அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்த, செல்வந்த மாணவர்கள் நேதன் லியோப்போல்ட்(19 வயது), ரிச்சர்ட் லோயப்(18) ஆகியோர் செய்தனர். நான்கு மாதத்தில் பேசத்தொடங்கி, 15 மொழிகளை அறிந்திருந்த லியோப்போல்ட், 210 ஐக்யூ(அறிவுத்திறன்) புள்ளிகள் பெற்றவர். அக்காலத்திய சோதனை முறைகள் நவீன முறைகளோடு ஒப்பிடுமளவுக்கு இல்லையென்றாலும், தற்போதைய சராசரி 85-115 புள்ளிகள்தான்! இவரைப்போன்றே அறிவுத்திறன்கொண்ட லோயப், பல வகுப்புகளில் இரட்டை உயர்வுபெற்று, 17வயதில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மிகக்குறைந்த வயது பட்டதாரியானவர். தங்கள் திறமையைப் பயன்படுத்தி ‘கச்சிதமான குற்றம்’ (பர்ஃபெக்ட் க்ரைம்) ஒன்றை, த்ரில்லுக்காகச் செய்வது என்று முடிவெடுத்து, ஏழு மாதங்கள் திட்டமிட்டனர். (கண்டுபிடிக்கவே முடியாத குற்றங்கள் பர்ஃபெக்ட் க்ரைம் என்று வகைப்படுத்தப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படாதவை வெளியே தெரியாது என்பதால் அதற்கு உதாரணங்கள் இல்லை. ஆனாலும், கண்டுபிடிக்க மிகச்சிரமமாக இருந்த சில குற்றங்கள் அவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.) யாரையாவது கடத்தி, பணயத்தொகைபெற்று, எதுவும் வெளியே தெரிந்துவிடாமல் கொல்வது என்று முடிவெடுத்து, கடத்துவதற்கு வசதியாக, அடுத்த தெருவிலிருந்த, லோயபின் தூரத்து உறவினரான 14 வயது பாபி பிராங்ஸ்-ஐக் கடத்தி, கொலை செய்து, உடை, முகம் உள்ளிட்ட அடையாளங்களை அமிலத்தால் அழித்துவிட்டு, பணயத்தொகையும் கேட்டனர். இடையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், பணயத்தொகை கிடைக்கவில்லை. எந்தப் பதற்றமுமின்றி விசாரணையிலும் உடனிருந்த இவர்கள், உடலுக்கருகில் கிடைத்த, லியோபோல்டின் தனிச்சிறப்பான மூக்குக்கண்ணாடியால் கண்டுபிடிக்கப்பட்டனர். நூற்றாண்டின் மிகப்பெரிய வழக்கு விசாரணை என்று கூறப்படுபவற்றில் ஒன்றான இவ்வழக்கின் இறுதியில், லோயபின் குடும்பம் (தற்போதைய மதிப்பில்) ஏழரைக்கோடி ரூபாய் கட்டணமளித்து ஏற்பாடு செய்திருந்த மிகப்பெரிய வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ, வயதைக் கருதி மரணதண்டனை விதிக்கக்கூடாது என்று 12 மணிநேரம் தொடர்ச்சியாகப் பேசினார். ஆயுள்தண்டனையுடன் 99 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1936இல் மற்றொரு கைதியால் லோயப் கொல்லப்பட, மேலும் 12 மொழிகள் கற்று, சிறைக்கு பல உதவிகள் புரிந்த லியோபோல்ட் 1958இல் பரோலில் விடுவிக்கப்பட்டு, 1971இல் இறந்தார்.அறிவுக்கடல்

;