tamilnadu

img

இந்நாள் மார்ச் 10 இதற்கு முன்னால்

1735 - பாரசீகப் பேரரசர் நாதிர்ஷா வுக்கும், ரஷ்யாவுக்கு மிடையே, (தற்போது அஸர்பை ஜானிலுள்ள) கேஞ்சா நகரில் உருவான ஒப்பந்தத்தையடுத்து, பாகுவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறின. பாகு என்பது தற்போது அஸர்பைஜான் நாட்டின் தலைநகரமும், அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமுமாகும். கடல் மட்டத்தைவிட 92 அடி தாழ்வாக உள்ள இந்நகரமே, உலகில் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் என்பதுடன், உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகத் தாழ்வாக அமைந்துள்ளதுமாகும். பாகு என்ற பெயருக்கு உறுதியான காரணம் தெரியவில்லை. பாரசீக மொழியில் பாக்-கடவுள் (இராக்கின் பாக்தாத்-துக்கு கடவுளால் அளிக்கப்பட்டது என்று பொருள்!), குய்-நகரம் என்ற சொற்களிலிருந்து பாக்குய் என்ற பெயர் உருவாகி பாகு ஆகியிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

காற்றடிக்கும் நகரம் என்ற பொருளுள்ள பாத்-குபே என்பதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்பது மற்றொரு, அதிகம் கூறப்படும் காரணம். அவ்வளவு காற்று வீசுவதால்தான், இன்றும் ‘காற்றின் நகரம்’ என்பது இதன் செல்லப் பெயராக உள்ளது. பட்டுப்பாதையில், ஐரோப்பா, ஆசியா, மத்தியக் கிழக்கு ஆகிய பகுதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருந்ததால், பாகு வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது. ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வாசலாக விளங்கிய அஸர்பைஜானின் பாகுவில், இந்தியத் துணைக் கண்டத்து வணிகர்கள் தங்கி வணிகம் புரிந்த இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது வணிகத்துக்கு முக்கியமானதாக இருந்தது. சஃபாவித் என்ற சூஃபி இஸ்லாமிய மரபின் ஆட்சியிலிருந்த இப்பகுதியை, 1722-23இல் நடைபெற்ற ரஷ்ய-பாரசீகப் போரில், ரஷ்யா கைப்பற்றியது.

1730-35இல் நடைபெற்ற ஒட்டோமான்-பாரசீகப் போரில், பாரசீகத்தின் வெற்றியையும், நாதிர்ஷாவின் படைபலத்தையும் அறிந்த ரஷ்யா, தங்கள் பாதுகாப்புக்காக, பாகு உள்ளிட்ட பகுதிகளை பாரசீகத்துக்கு வழங்கி, அதற்கு பதிலாக ஜார்ஜியாவின் ரஷ்ய ஆதரவு அரசர் ஆறாம் வாக்டாங்-கை பாரசீகம் அங்கீகரிப்பதற்கு இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. இதைத்தொடர்ந்து உருவான பாகு கானேட்(சுல்தானேட் போல), 1804இல் தொடங்கிய ரஷ்ய-பாரசீகப்போரில் வீழ்த்தப்பட்டு, 1806இல் பாகு ரஷ்யப் பேரரசில் இணைக்கப்பட்டது. சோவியத் புரட்சியின்போது, பிரிந்து உலகின் முதல், இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மதச்சார்பற்ற குடியரசாக அஸர்பைஜான் உருவானாலும், 1920இல் மீண்டும் சோவியத்துடன் இணைந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பின் தனிநாடாகிய அஸர்பைஜானின் தலைநகராக பாகு செயல்படுகிறது.

- அறிவுக்கடல்

;