பயணக்குறிப்பு
சென்னை மெரினா கடற்கரையை ஞாபகப்படுத்திய இடம் கனடாவில் உள்ள கேரி முனைப் பூங்கா. தலைநகர் வான்கூவர் ரிச்மான்ட் தென்பகுதியில் திடீரென மனதைக் கிளறும் கிராமத்து வாசம். மெரினாவில் நீச்சல் குளத்தின் பின்பகுதியையும் அதன் தென்பகுதியையும் ஓர் எழுபத்தைந்து ஏக்கர் நிலமாக விஸ்தரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பகுதி. ஏதோ ஓர் இனம்புரியாத மண்வாசம். உடனே அங்கங்கும் உலர்ந்த காற்றில் பரவும் சிறுநீர் கமறல்களும் நினைவுக்கு வரக்கூடாது. ஆள் இல்லாத புதர்கள் ஏராளம். ஆனால் அதற்கு முன் நின்று ஒற்றை மழையடிக்கும் ஒருவரைக்கூட அங்கு பார்க்கமுடியாது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அனைத்துப் பொது இடங்களிலும், உணவு விடுதிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேண்டிய அளவுக்கு மிகவும் சுகாதாரமான கழிவறைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் இருக்கும் சுத்தத்துடன் ஒவ்வொரு கழிவறையையும் காணமுடியும். நம்மூரில் அவசரத்துக்கு ஒதுங்க வேண்டுமென்றால் ஒரு கழிப்பறைக் கட்டடம் கூடக் கண்ணில் தென்படாது. அப்படியே அபூர்வமாக இருந்தாலும் உள்ளே போய் வருவதற்குள் ஓமளித்துக் கொண்டு வரும். முற்றும் முழுதுமான தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டீவஸ்டன் கிராமத்து மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம்தான் கேரி முனைப் பூங்கா (ழுயசசல ஞடிiவே ஞயசம). இந்த நிலப் பகுதி 1827 இல் ஹட்சன் பே கம்பெனியின் முன்னாள் துணை ஆளுநராக இருந்த நிக்கோலஸ் கேரி என்பவரை கவுரவிக்கும் விதமாக கேரி முனைப் பூங்கா என்று பெயரிடப்பட்டது. கனடாவில் ஒரு தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்த இந்த ஹட்சன் பே நிறுவனம்தான் ஃபிரேசர் ஆற்றின் முகத்துவாரத்தைத் தனது கப்பல் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டது.
மனிதர்களை விடுங்கள். நாய்கள் கூட கண்ட இடத்தில் மலம் கழித்துவிட முடியாது. தெருநாய்கள் அங்கு கிடையாது. நிறைய நபர்கள் கழுத்தில் பட்டை கட்டிய வளர்ப்பு நாய்களைக் கயிற்றில் பிடித்தபடி அங்கங்கும் காட்சியளிப்பார்கள். வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்கள் பூங்காவின் முகப்பில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாயின் கழிவுகளை நாய் வளர்ப்பவர்கள் அந்தப் பைகளில் சேகரம் செய்து கழிவிடத்தில் இட்டுவிட வேண்டும். இதை மீறுபவர்கள் விலங்குகள் கட்டுப்பாட்டு விதிமுறை எண் 7932-ன்படி தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்தப் பகுதியில் ஒரு நீண்ட கால்வாய் மாதிரி இருந்தது. ஏராளமான மீன்பிடிக் கப்பல்கள் அங்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்றும் 600 மீன்பிடிக் கப்பல்கள் இயங்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். கேரி முனைப் பூங்காவின் பல இடங்களில் மிகவும் தடிமனான மரத்துண்டுகளால் இருக்கைகள். உணவு வகைகளைக் கடித்தபடியே (ஹாட் டாக் கள், பேகன்கள் வகையறா) அந்த இடத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ரசிப்பதற்கென்று ஒரு மனத்தை ஒவ்வொருவரிடமும் காணமுடியும். கனடாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிக்கணக்காக ஒவ்வொரு இடத்தையும் பொறுமையாகச் சுற்றிப் பார்க்கிறார்கள். இரவு ஒன்பது மணிக்குத்தான் இருட்ட ஆரம்பிக்கிறது. இந்த கேரி முனைப் பூங்காவில் சூரிய அஸ்தமனம் மிகவும் பிரபலம். பகலவன் படுப்பதெற்கென்றே பசிபிக் கடல் மெத்தைபோல குவிந்து மேல்நோக்கி வளைந்து கொடுப்பதுபோல ஒரு தோற்றம். அசந்து போனேன். நாள் முழுதும் சூரிய அஸ்தமனம் நடந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கியது. ஓரிடத்தில் ஒரு உலோகத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்ணில் பட்டது. முதல் முதலாக ஜப்பான் நாட்டிலிருந்து கனடாவுக்கு வந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கியி குணோ (ழுஐழநுஐ முருசூடீ) இந்த இடத்தில்தான் கரையேறியிருக்கிறார். அந்த நிகழ்வின் நூற்றாண்டு நினைவாக 1988 ஆம் ஆண்டில் நிறுவியிருக்கிறார்கள். வந்த குடியேறியைக் கொண்டாடும் வரலாறும் புதியதாகத்தான் இருக்கிறது. இவரது பெயரில் ஒரு தோட்டம் அமைத்துப் பராமரிக்கப் படுகிறது. வந்தவர்கள் அனைவரின் நாடாக மாறிப்போனதால் கனடாவின் முதல் குடிமகன்கள் இன்றைக்கு வெறும் ஐந்து சதமானம்தான்.
இந்தப் பூங்கா அமைந்திருப்பதே ஸ்டீவஸ்டன் மீனவர் ஊரின் கடைசியில்தான். மீனவர்கள் என்றால் நம்நாட்டு மீனவர்களையும் அவர்கள் வாழ்வதற்கான கிழிந்துபோனக் கீற்றுக் குடிசைகளையும் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. இங்கு மீனவர் என்றால் அவர் எந்திரப் படகை வைத்துக்கொண்டு வசதியாக வாழ்பவராக இருக்கிறார். மீன்பிடித்துறை இருக்கும் இடத்தில் மாலை 8 மணி முதல் 9 மணி வரைப் பார்த்ததில் மீன்நாற்றமே வரவில்லை. மீன்வாசம் வராத மீன்பிடித் துறையா? ஆச்சரியமாகத்தான் இருந்தது. கவிச்சை இல்லாததற்குக் காரணம் அறிவியல் முன்னேற்றத்தைத் தொழில்துறையில் கடைப்பிடித்து வருவதல்லாமல் வேறென்ன? முழுக்க முழுக்க மீன்பிடித் தொழிலில் தொழில் நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டினாற்போலவே ஒரு மீன் வலை பின்னும் ஊசியின் உலோகச் சிலையுடன் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தும் திசைகாட்டியையும் நினைவுச் சின்னமாக நிறுவியிருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் தேதியிட்ட நினைவுக்குறிப்புத் தகவல் பலகை அங்கிருக்கிறது. தொழிலில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் சமூக வளர்ச்சியில் பங்களித்து இறந்துபோன மீனவர்களின் நினைவாக இந்தச் சின்னம் நிறுவப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தின் அடிப்பகுதியில் ஒவ்வொரு மீனவரின் பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது. மெரினா கடற்கரையையும் மீனவர்களின் நிலையையும் பார்த்த ஒருவனுக்கு இதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்ததில் வியப்பில்லை. வெகுநேரம் அங்கேயே உறைந்து போய் நின்றிருந்தேன்.
கண்முன்னே ஆவியாகிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வியர்வைத் துளிகளின் வாசமடித்தது. நம்நாட்டு மீனவர்களின் துயரங்களை மனம் பட்டியலிட்டுப் பார்த்தது. நம் நாட்டுக்கும் கனடாவுக்கும் உண்மையிலேயே வெகுதூரம்தான். அந்த தூரம் வெறும் ஆகாய விமானப் பயணத்தின் மூலம் கண்டடைய வாய்ப்பே இல்லாத மானுட தூரம்
-பயணிப்போம்