அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹௌடி மோடி’ நிகழ்ச்சிதான் நேற்று முதல் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான நட்பு குறித்து பேசத் தொடங்கிய மோடி, காஷ்மீர், பாகிஸ்தான், தீவிரவாதம், நாட்டின் வளர்ச்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசினார். ` இந்தியாவில் எல்லோரும் நலமாக இருக்கிறோம்' என்பதைப் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மோடி, ட்ரம்ப் ஆகியோர் பேசுவதற்கு முன்னர் மைதானத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ட்ரம்புக்கு மோடி வாக்கு கேட்டார். இது இந்தியாவின் அயலுறவுக் கொள்கைக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் ஒன்று `ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியபடியும் கோஷங்களுடனும் போராட்டம் நடத்தினர். மைதானத்துக்கு அருகே கிர்பை அவன்யூ என்னும் இடத்தில் போலீஸாரின் கண்காணிப்பில் போராட்டம் நடைபெற்றது.அந்தப் போராட்டத்தில் சில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்களும் கலந்துகொண்டனர். மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பைச் சேர்ந்த சுனிதா விஸ்வநாத் கூறுகையில், ``வசுதெய்வ குடும்பகம் (Vasudaiva Kutumbakam) கற்றுத் தரும் எங்கள் மதம், இன்று தீவிரவாதிகளாலும் தேசியவாதிகளாலும் கடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்லாமியர்களைத் தாக்குகிறார்கள்.
இதுதொடர்பாக பேசுபவர்களைக் கைது செய்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நிலை குறித்தும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு சட்டத்தால் 1.9 மில்லியன் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கவலை கொண்டுள்ளோம்” என்றார்.
இந்திய அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த சயீத் அலி, ``நாங்கள் காஷ்மீர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை ஆதரிக்கிறோம். இது சுதந்திரமான நாடு. இங்கு அனைத்து மக்களுக்கும் யாரையும் எதிர்த்துப் போராட உரிமை உள்ளது” என்றார்.