நாளை வாக்குப் பதிவு
சென்னை,டிச.28- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30 அன்று நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் டிசம்பர் 28 அன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஊர்களில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் வெளியேற ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அவர்களை கண்காணிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு டிசம்பர் 30 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 702 பேரும், உதவி அதிகாரிகள் 13,062 பேரும், இது தவிர 4,02195 அலுவலர்களும் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர். சுமார் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுகளை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.