கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.
இந்த சூழலில், அமெரிக்க மூத்த அதிகாரிகளுடன் கிரீன்லாந்தின் தீவை வாங்க விரும்புவதாக டிரம்ப் பேசியதை அடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில், ’டிரம்ப்’ என எழுதப்பட்டு இருந்த ஒரு பெரிய தங்க கோபுரம் கிரீன்லாந்தில் இருப்பது போன்ற புகைப்படத்துடன், ”கிரீன்லாந்திற்கு இதைச் செய்ய மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கூறுகையில், ”கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல. அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது. மேலும், கிரீன்லாந்து டென்மார்க்குடையது அல்ல. கிரீன்லாந்து, கிரீன்லாந்தை சேர்ந்தது. டிரம்பின் கருத்து தீவிரமாக இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
இதை அடுத்து, டிரம்ப் அடுத்த மாதம் மேற்கொள்ள இருக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுமுறை பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.