tamilnadu

img

கூட்டுக் களவாணிகளின் பணத்தில் புரள்கிறது பாஜக

புதுதில்லி:
கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில், பாஜக ஆட்சியாளர்களும் பெரு முதலாளிகளுமாக சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்த கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியமே நடந்தது என்றும் அதன் பலனாக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெரும் அளவில் நிதி கைமாறு பெற்றிருக்கிறது என்றும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் சாடினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் துவக்கமாக மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. திங்களன்று இவ்விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், 17வது மக்களவைத் தேர்தலில்,பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஐந்தாண்டு காலமாக பாஜக மிகக்கடுமையான இந்துத்துவா மதவெறி தாக்குதல் களைக் கட்ட விழ்த்துவிட்டது; அதற்கு எதிராக வலு
வான முறையில் தேர்தல் போராட்டத்தை நடத்துவதற்கு மாறாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மென்மையான முறையில் மேற்கொண்ட இந்துத்துவா அணுகுமுறையைமக்களும் இதர கட்சிகளும் ஏற்கவில்லை; அதன் பிரதிபலிப்பே தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வி என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழகத்தில் பாஜகவின் மதவெறிக்கும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிராக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எதிர்க் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட வலுவான ஒற்றுமையும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களும் வாக்காளர்களை ஒன்றுபடுத்த உதவியது; இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்திருக்க வேண்டும் என்றும் டி.கே.ரங்கராஜன் தமிழக அனுபவத்தையும் சுட்டிக்காட்டினார்.

17வது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் ஏற்கெனவே இருந்த பலம்மேலும் குறைந்திருப்பது குறித்தும் ஒப்புக்கொண்ட அவர், “எமது கட்சியின் நிலை 
ஓர் இலக்கம் என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. எனினும் நாங்கள் அரசியல் ரீதியாக திருப்பித் தாக்குவோம். மார்க் சியம் ஒரு போதும் மரித்துப் போகாது. மார்க்சியம் என்பது உயிரோட்டம் உள்ள ஒரு மாபெரும் தத்துவமாகும். அதுவே இறுதியில் வெல்லும்” என்றும் முழங்கினார்.

விவாதத்தின்போது மோடி அரசை அம்பலப்படுத்தி மேலும் அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசாங்கம் என்ன செய்தது? பண மதிப்பிழப்பைக் கொண்டுவந்தது. பின்னர் ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக் கின்றன. சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் அழிந்துவிட்டன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதைநாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. தலித்து களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. சிறுபான்மை யினருக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்திருக்கின்றன. இவை அனைத்தும் இருந்தும்கூட பாஜகவினரால் வெற்றி பெற முடிந்திருக்கிறது.

இது எப்படி? இதன் மந்திரம் என்ன? ஒரே மந்திரம், புல்வாமா மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல்.திருவாளர் மோடி, பணமதிப்பிழப்பை அறிவித்த போது அது பயங்கரவாதத்தை ஒழித்திடும் என்று நமக்கு உறுதிமொழி அளித்தார். ஆனால் இப்போதும் பயங்கரவாதம் ஜீவித்துக்கொண்டுதான் இருக்கிறது.பயங்கரவாதத்திற்கு நம் வலிமை யால் தக்க பதிலடி கொடுத்துவந்தோம். இயல்பாக இது நடக்கிறது. 1965இல் பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பின், காங்கிரஸ்வென்றது. 1971 வங்கதேச யுத்தத்திற்குப் பின், காங்கிரஸ் வென்றது. ஆளும் கட்சியினருக்கும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமர்ந்திருக்கும் வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கும் ஒன்றைத்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது மட்டும் மக்களுக்கு அமைதி யைத் தந்துவிடாது. இதுதான் வரலாறு.1971இல் காங்கிரஸ் மிகப் பெரிய பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், 1974இல் அது ஒரு மாபெரும் ரயில்வேவேலைநிறுத்தத்தை எதிர்கொண்டது. 1975இல் அவசரநிலை பிறப்பிக்கப் படாமல் நாட்டை அதனால் ஆட்சி செய்ய முடியவில்லை.  1977இல் அது தோற் கடிக்கப்பட்டது. இது வரலாறு. அதே வரலாறு இப்போது வேறு வழியில் திரும்பியிருக்கிறது.

கூட்டுக் களவாணிகள்
2014க்கும் - 2018க்கும் இடையில் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள கூட்டுக்களவு முதலாளித்துவம், தேர்தலில் இவர்களுக்கு உதவியிருக்கிறது. ஒட்டுமொத்த முத லாளித்துவ வர்க்கமும் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு உதவி இருக்கிறது. இரு உதாரணங்களை என்னால் கூற முடியும்.அம்பானிக்குச் சொந்தமான ரிலை யன்ஸ் நிறுவனத்திற்கு 2014இல் 2300 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து இருந்தது. 2018இல் அது 5500 கோடி களாக உயர்ந்திருக்கிறது.2014இல்  அதானியின்  சொத்து மதிப்பு260 கோடி. 2018இல் அது 1190 கோடி. இதேபோன்றே நம் நாட்டிலுள்ள அனைத்து பெரும் முதலாளிகளின் சொத்துக்களின் மதிப்பும் உயர்ந்திருப்பதைப் பார்க்க முடியும். பாஜக அரசாங்கம், முதலாளி களுக்கு உதவி இருக்கிறது. அதற்குக் கைமாறு செய்யும் விதத்தில் அவர்கள் இந்த அரசுக்கு உதவி இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளின் பணம், கார்ப்பரேட்டுகளின் ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் அனைத்தும் இந்த அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன.
இந்தத் தேர்தலில் பாஜக 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருப்பதாக ஓர் ஆய்வு மதிப்பிட்டி ருக்கிறது. ஊடக ஆய்வு மையம் (Centre of Media Studies) என்னும் அமைப்பு இதனைச் செய்திருக்கிறது. அதாவது மொத்தத் தேர்தல் செலவினத் தொகையில் 45 சதவீதம், பாஜக செலவு செய்திருக்கிறது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள்
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது என்பது, மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக பாஜக மட்டும் 4,794 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும். அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பாக ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு ஓர் அருமையான தலையங்கம் தீட்டியிருக்கிறது. எந்தவொரு நாடும் - ஐரோப்பா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா 
என எந்தவொரு நாடும் – தங்கள் நாட்டுத் தேர்தல்களில் செலவுசெய்வ தற்காக அந்நிய நாட்டுப் பணத்தை அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கே, வேதாந்தா நிறுவனம் பணம் கொடுக் கிறது. அவர்கள் மறுக்கட்டும். அதனை என்னால் மெய்ப்பிக்க முடியும்.

வளர்ச்சியின் பயணம்?
குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில், “வளர்ச்சிக்கான பயணம் 2014இல் தொடங்கியது” என்று குறிப் பிட்டிருக்கிறார். இதனை ஏற்க முடியாது.வளர்ச்சி தொடர்பாக இந்திய நாடு ஒரு வரலாற்றைப் பெற்றிருக்கிறது. மொகலாயர்கள் காலத்தில் ஒரு வளர்ச்சி இருந்ததைப் பார்த்தோம்.  பிரிட்டிஷாரும் இந்தியாவை வளர்த்தெடுத் திருக்கிறார்கள். அது, அவர்களின் சொந்த நலனுக்கானது என்ற போதிலும் கூட, அவர்களும் வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின்னர், ஆட்சிபுரிந்த பல அரசாங்கங்களும் நாட்டை வளர்த்திருக்கின்றன. ஆனால் இதை யெல்லாம் ஒதுக்கிவிட்டு இப்போது இவ்வாறு “குடியரசுத் தலைவர் உரை”யை எழுதித்தந்துள்ள ஆளும் கட்சியினர்  கூறியிருப்பதன் மூலம், வாஜ்பாய் அங்கம் வகித்த அவர்கள் ஜனதா அர சாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களின் சாதகமான அம்சங்களைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள்.

தாகூர் சொன்னது என்ன?
குடியரசுத் தலைவர் அவர்கள், நாராயணகுருவை மேற்கோள் காட்டி யிருக்கிறார், ரவீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார். மகாத்மாகாந்தியை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதேபோல் அவர் வள்ளலாரையும், திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டி யிருந்தாரானால் நான் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.தாகூர் தேசியம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்? “இந்தியாவின் வரலாறென்பது எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் சொந்தமானது அல்ல, பல்வேறு இனங்களின் சங்கமத்தால் உருவானது என்பதையும் உலகில் உள்ள பல்வேறு இனத்தினர் இதற்குப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அங்கீகரித்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார். திராவிடர்கள், அதாவது தென்னிந்தியாவில் வாழ்பவர்கள் இதற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். தாகூர் இதனை அங்கீகரித்திருக்கிறார். திராவிடர்கள், ஆரியர்கள், புராதன கிரேக்கர்கள், பாரசீகர்கள், மேற்கிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் வந்த முகமதியர்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். கடைசியாக வந்த ஆங்கிலேயர்களும் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவின் வரலாற்றைக் குறித்து எழுதும்போது இவர்களின் பங்களிப்பு களை மறைப்பதற்கு நமக்கு எவ்வித உரிமையும் கிடையாது, அதிகாரமும் கிடையாது. தாகூர் இவ்வாறுதான் கூறி யிருக்கிறார். எனவே, ஒரு தேசம் என்று கூறுகிறபோது அது அங்கே வாழும் மனி தர்களுடன் சம்பந்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் வாழும் பல்வேறு இன க்களுடனும் சம்பந்தப்பட்டது. ரவீந்திர நாத் தாகூர் கூறியிருப்பது இதுதான்.

விவசாயிகளை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
குடியரசுத் தலைவர் தன் உரையில்,விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்குவதற்காக ஒரு திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பாஜகவின் சென்ற தேர்தல் அறிக்கையில், பாஜக, டாக்டர் எம்.எஸ்.சுவாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று உறுதிமொழி கூறியிருந்தது. இது தொடர்பாக உறுப்பினர் நட்டா கூறியது அனைத்தும் உண்மை. அவை அமல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

வங்கி மோசடி அதிகரிப்பு
நிதி மற்றும் வங்கித்துறையைப் பொறுத்தவரை சில வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதாகப் பட்டியலிடப்பட்டு, பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக, குடி யரசுத் தலைவர் உரையில் பீற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி மோசடி, முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு 2018-19இல், 71,500 கோடி ரூபாயைத் தொட்டிருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. வங்கி மோசடி தொடர்பாக 6,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியைநீரவ் மோடி சூறையாடியது வெளிச்சத்திற்கு வந்தது. இப்போது ஐஎல்&எப்எஸ் உள்கட்டமைப்பு மோசடி மற்றும் தேவன் ஹவுசிங் திவால் மோசடி என வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் நிதி நிலைமையைக் கடுமையாகப் பாதிக்கும் அம்சங்களாகும். இவற்றிலிருந்து எப்படி மீளப் போகிறோம் என்பது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக, அரசாங்கம், “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தலைவர்” என்று கூறுவதன் மூலம் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது.

மக்களை முட்டாளாக்காதீர்கள்!
எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். நம் நாடு கூட்டாட்சி அமைப்பு முறையிலானது. இதுதொடர்பாக நம் அரசமைப்புச் சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதனை ஒரே இரவில் நாம் மாற்றிவிட முடியாது. 1959இல் அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவிற்கு முதலில் பலியானது நாங்கள்தான். மோடிஅரசு கூட மாநில அரசை டிஸ்மிஸ் செய்திருக்கிறது. நீங்கள் ஏன் டிஸ்மிஸ் செய்தீர்கள்? நீங்கள் பின்பற்றுவது “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்றால் பின் ஏன் வாஜ்பாய் அரசாங்கம், மாநில அரசை டிஸ்மிஸ் செய்தது? இவ்வாறெல்லாம் செய்துவிட்டு இப்போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்று கூறுகிறீர்கள். எல்லோரையும் முட்டாளாக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.