tamilnadu

img

7-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது இந்தியா!

புதுதில்லி:
2019-20 நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின்படி (ஜிடிபி) இந்தியா, உலகிலேயே 6-வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். 
மேலும், தற்போது 2.10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக விளங்கும் இந்தியா, “நடப்பு நிதி ஆண்டிலேயே, 3 லட்சம் கோடி டாலர்  பொருளாதார நாடாக உயரும்” என்றார். “2024-25-ம் நிதி ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்துவதே மோடி அரசின் இலக்கு” என்றும் ஜம்பம் அடித்தார்.இந்நிலையில்தான், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா, 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் பட்டியலை உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 2017-ஆம் ஆண்டு உலக அளவில் 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், 2018-ஆம் ஆண்டில் 7-ஆவது இடத்திற்கு போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம், 2017-ஆம் ஆண்டு 2.65 லட்சம் கோடி டாலர் மதிப்புடன், உலக அளவில் 5-ஆவது இடத்தில் இருந்தது. அப்போது, 2.64 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் பிரிட்டன் 6-ஆவது இடத்திலும், 2.59 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் பிரான்ஸ் 7-ஆவது இடத்திலும் இருந்தன. 

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், பிரிட்டன் 5-ஆவது இடத்திற்கும் பிரான்ஸ் 6-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளன. 2017-ஆம் ஆண்டு 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, உலக பொருளாதார அரங்கில் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில், 20.49 லட்சம் கோடி டாலருடன் முதல் இடத்தில் அமெரிக்காவும், 13.61 லட்சம் கோடி டாலருடன் 2-ஆவது இடத்தில் சீனாவும் உள்ளன. 4.97 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் ஜப்பான் 3-ஆவது இடத்தையும், 3.99 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜெர்மனி 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.