tamilnadu

img

முகமூடி குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக முன்னாள் ஜேஎன்யு மாணவர்கள் கிளர்ச்சிப் போராட்டம்

புதுதில்லி, ஜன.8-

ஞாயிறு அன்று ஜேஎன்யு பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய முகமூடி குண்டர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், கன்னையா குமார் உட்பட ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஜேஎன்யு வளாகத்தில் செவ்வாய் அன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி, “இங்கே நடைபெற்ற தாக்குதல் இரு குழுக்களுக்கு இடையேயான சண்டை என்பது போல் அரசுத்தரப்பில் கூறப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிக் கிடையாது. இது ஜேஎன்யு மாணவர் சமுதாயத்தினை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காக,  நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாகும். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது இப்போதுள்ள துணை வேந்தரை இங்கே நியமனம் செய்ததிலிருந்தே தொடங்கிவிட்டது,” என்று கூறினார்.
ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதை நாட்டில் உள்ள பிரபல தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர். மும்பை திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஜேஎன்யு வளாகத்திற்கு வந்து காயமடைந்த கோஷ் மற்றும் மாணவர்களைச் சந்தித்து, தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார்.

நேபாளத்திலும் கண்டனம்

ஜேஎன்யு வளாகத்தில் மாணவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நேபாளத் தலைநகர் காத்மண்டிலும் கண்டன இயக்கம் நடைபெற்றுள்ளது. இதற்கு நேபாள முன்னாள் பிரதமரும், ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான பாபுராம் பட்டராய் தலைமை வகித்தார். “நேபாளத்தில் உள்ள ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள், தங்கள் பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கவும் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். ஜேஎன்யு என்பது ஒரு பல்கலைக் கழகம் மட்டுமல்ல, விடுதலை, ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் அநீதிக்கு எதிரான எதிர்ப்பு என்கிற சிந்தனைகளும் மலர்கின்ற இடமாகும்,” என்று பாபுராம் பட்டராய் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)