tamilnadu

img

காஷ்மீர் பயணத்தை புறக்கணித்த 4 ஐரோப்பிய எம்.பி.க்கள்

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீருக்குச் செல்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தும், ‘இது உலகத்தை ஏமாற்றுவதற்கு மோடி அரசு நடத்தும் நாடகம்’ என்று கூறி, ஐரோப்பியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் தாங்களாகவே பயணத்திலிருந்து விலகிக் கொண்டிருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது.

அதுமட்டுமன்றி, அவர்கள் காஷ்மீர் பயணத்தைப் புறக்கணித்து உடனடியாக சொந்த நாட்டிற்குத் திரும்பியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள், இந்திய எம்.பி.க்களை அனுமதிக்காத மத்திய பாஜக, ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களுக்கு மட்டும் காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கியது.அவர்களும் செவ்வாயன்று காலை தில்லியிலிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்குச் சென்று, அங்கு இருக்கும் ராணுவ அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிவிட்டு, காஷ்மீர் நிலை நல்லபடியாகவே இருப்பதாக பேட்டி அளித்துள்ளனர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த எம்.பி-க்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காத மத்திய அரசு, ஐரோப்பியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடி அரசைக் கண்டித்துள்ளனர்.இதற்கிடையில், ஐரோப்பிய எம்.பி.க்களின் காஷ்மீர் பயணமானது, ஒருநாடகம் என்றும், அது மோடி அரசை விளம்பரப்படுத்துவதற்கான யுக்தி என்றும், ஐரோப்பிய எம்.பி. ஒருவரே கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள் ளார்.கிறிஸ் டேவிஸ் என்ற அந்த எம்.பி.ஐரோப்பிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ஜம்மு - காஷ்மீர் பயணத்திற்கு, இவருக்கும் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீர் பயணக்குழுவில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்து விட்ட கிறிஸ் டேவிஸ், அதற்கான காரணத்தைத் தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“காஷ்மீரில் ஜனநாயகக் கொள்கைகள் தகர்ந்து வருகின்றன என்பது மிகத்தெளிவாக உள்ளது. அங்கு சென்று, ‘எல்லாம் நன்றாகவே உள்ளது’ என்றுகூறி பாசாங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை. காஷ்மீரை உலகம் கவனிக்கத் தொடங்க வேண்டும்; அதற்காகவே மோடி அரசை விளம்பரப்படுத்தும் பயணத்தைத் தவிர்த்து விட்டேன்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.ஐரோப்பாவில் உள்ள பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை அமைப்புதான் ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி-க்களின் காஷ்மீர் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் மெயில் மூலம் கிறிஸ் டேவிஸூக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது, “நான் காஷ்மீர் வந்தால் தனியாக- சுதந்திரமாக- பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல் மக்களிடம் பேச வேண்டும்; அதற்கு அனுமதிப்பீர்களா?” என்று டேவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், பயண ஏற்பாட்டாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுகூறப்படுகிறது. இதையடுத்தே கிறிஸ்டேவிஸ் காஷ்மீர் பயணத்தை புறக்கணித்து, இது மோடியை விளம்பரப் படுத்துவதற்கான நாடகம் என்று விமர்சித்துள்ளார்.இதனிடையே, கிறிஸ்டேவிஸைப் போன்று மேலும் 3 எம்.பி.க்களும் இதே காரணத்திற்காக காஷ்மீர் பயணத்தை புறக்கணித்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனான சந்திப்பில், இந்த 27 பேரும் கலந்து கொண்டனர். ஆனால், இவர்களில் 23 பேர் மட்டுமே ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.