நாமக்கல், மே 19-வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிரூ.2.75 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்திபுரம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ரொசாரியோ (34). நிலம் விற்பனையில் ஈடுபட்ட இவர், தனது நண்பர் திலீப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் இத்தொழிலை செய்து வந்தார். இதற்கிடையே, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரவீன்குமார் (28) என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. பட்டதாரியான பிரவீன்குமார், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயற்சித்து வந்தார். அப்போது, தான்அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி, ரூ.2.75 லட்சத்தை ரொசாரியோ பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பிரவீன் குமாரும், கடலூரில் இருந்து சேந்தமங்கலம் வந்து அவரிடம் பணம் மற்றும் வேலை தொடர்பாக கேட்டு வந்தார். ஆனால் அவர் ஏமாற்றுவது தெரியவந்ததால், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ரொசாரியோ, இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இரவு வீட்டுக்கு சென்றஅவரை காவல்துறையினர் கைது செய்தனார். அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் 20 பேரிடம் வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ.9 லட்சம் வரை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.