மயிலாடுதுறை, ஜன. 20 - காவிரி பாசனப் பகுதி மாவட்டங் களில், கடந்த 2 நாட்களாக கொட்டிய கனமழையால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள், திடீர் கன மழையால் முற்றிலுமாக சாய்ந்தும், நீரில் மூழ்கி அழுகியும் சேதம் அடைந்துள்ளன. இயற்கை இடர்பாடுகள் பல வற்றையும் தாண்டி, கண்ணிமை போல பாதுகாத்து, பயிர்களைக் காப்பாற்றி அறுவடை வரை கொண்டு வந்த விவசாயிகள், பருவம் தப்பிய திடீர் மழையால் தற்போது சொல்லொணா துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். நகைகளை அடகுவைத்தும், வட்டிக் கடன் வாங்கியும் சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போதைய பாதிப்பால் பெரும் கவலை அடைந்துள்ளனர். நெல் மட்டுமன்றி, உளுந்து, பாசிப்பயிறு சாகுபடியும் அழிந்துள்ளது.
மயிலாடுதுறையில் 15 செ.மீ. மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு வட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் ஜனவரி 15 அன்று லேசான தூரலுடன் துவங்கிய மழை, ஜனவரி 18 அன்று மதியம் முதல் கனமழையாக மாறி, ஜனவரி 19 அன்று முற்பகல் வரை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டிலேயே தரங்கம் பாடியில் அதிகபட்சமாக 15 செ.மீ. வரை மழையும், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் தலா 11 செ.மீ மழையும் பெய்தது. 85 ஆயிரம் ஏக்கரில் பாதிப்பு இந்த பருவம் தவறிய திடீர் கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத் தில் தில்லையாடி, திருக்கடையூர், திருவிடைக்கழி, திருவிளையாட்டம், டி.மணல்மேடு, வளையசோழகன், பெரம்பூர், சேத்தூர், வதிஷ்டாச் சேரி, அரசூர், ஆனதாண்டாபுரம், அருவாபாடி, கீழ மருதாங்கநல்லூர், ஆற்காடு, வேப்பங்குளம், நீடூர், அருள் முடித்தேவன், மணலூர், பாண்டூர், பொன்னூர், ஆனந்தகுடி, குத்தாலம் சுற்றுவட்டார பகுதி யில் அஞ்சார் வார்தலை, வில்லிய நல்லூர், கோமல், மணல்மேடு உட்பட மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருகின்றன. வட்டிக்கு கடன் வாங்கி நெற்பயி ரிட்ட விவசாயிகள் மழை தந்த பாதிப் பால் செய்வதறியாது கவலையில் மூழ்கியுள்ளனர்.
அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.25 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் சித்தி ரக்குடி, கல்விராயன்பேட்டை, 8 நம்பர் கரம்பை, ஆலக்குடி, வண்ணாரப் பேட்டை, கள்ளப்பெரம்பூர், சீராளூர் உட்பட பகுதிகளில் ஆந்திரா பொன்னி, சி.ஆர்.1009, கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இதில் கோ 50, 51, ஆந்திரா பொன்னி ரகங்கள் 135 நாட்கள் பயிராகும். சி.ஆர்.1009 – 160 நாட்கள் பயிர். தற்போது கோ 50, 51, ஆந்திரா பொன்னி ஆகியவை இன்னும் 2 வாரங்கள் சென்றால் அறுவடை செய்து விடலாம் என்ற நிலையில் இருந்தன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவ லாக மழை பெய்த நிலையில், சித்தி ரக்குடி, கல்விராயன்பேட்டை, சீராளூர், 8 நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. இத னால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயி களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வயலிலேயே சாய்ந்த சம்பா
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.50 லட்சம் ஏக்கருக்கு மேலாக சம்பா சாகுபடி செய்யப் பட்டுள்ளது. புயல், கனமழை எனத் தொடர்ந்து பல்வேறு பாதிப்பு களை எதிர்கொண்டு, சம்பா பயிர் களை, விவசாயிகள் மிகவும் கஷ்டப் பட்டு காப்பாற்றி வந்தனர். பல்வேறு இடங்களில் அறுவடை யும் நடைபெற்றுக் கொண்டிருக்கி றது. இந்நிலையில், பருவம் தவறிய திடீர் மழையால், நன்னிலம், திருத்து றைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், திருக்குவளை, நாகப் பட்டினம், திருமுருகல், வேதா ரண்யம், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சிபிஎம் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி.நாகைமாலி எம்எல்ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல், நிலக்கடலை, எள், பயறு பாதிப்புக்கும் நிவாரணம் வழங்குக!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், பருவம் தவறி பெய்த கன மழையால் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு இதுவரை அறுவடை நடைபெற்றதில் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்த கன மழையின் காரணமாக விவசாயிகள் செய்வதறியாமல் நிலைக் குலைந்துள்ளனர். எனவே, மாநில அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக கணக்கீடு செய்ய வேண்டும். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். உளுந்து, நிலக்கடலை, எள், பயிறு பாதிப்புக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!
பருவம் தவறிய கனமழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று பருவம் தவறிப் பெய்த கனமழை யின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயுள்ளன. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர் களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கிச் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை யும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு, மழை - வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை உடனடியாக பார்வை யிட்டு கணக்கிடுவதுடன், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், பிற பயிர்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதம் ஈரப்பதம் இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதம் வரை உயர்த்தி நெல்கொள்முதல் செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.