tamilnadu

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது!

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது!

பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை சென்னை, செப். 27 - காலாண்டு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு அக்டோபர் 5 வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவைச் சுட்டிக்காட்டி, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘’காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு விடுமுறைக் காலங்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் பதிவு செய்யப்பட்டு வருகின்றனவா? என்பதை மேற்பார்வை செய்து மாவட்டத்தில் மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘’விடுமுறை நாட்களில் பல பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எனவே அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து பள்ளி மீது ஏதேனும் புகார் எழும்பட்சத்தில், தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 2023-இன்படி, துறையின் அறிவுறுத்தல்களை மீறி, பள்ளி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.