இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கட்சியிலும் உப அமைப்புகளிலும் பொறுப்புகளில் இருந்தவர். உடல் தளர்ந்தாலும் சோர்வில்லாமல் இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு ஏதாவதொரு அரசு அலுவலகத்தில் நின்று கொண்டிருப்பார். எளிமையின் உருவமாக வலம்வரும் அவர், “மேடைக் கலைவாணர்” என்று அழைக்கப்படும் தோழர் நன்மாறன். மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். “என் அப்பா காளியம்மன் கோவில் பூசாரியா இருந்தவர். கோவிலில்இருந்து வீட்டுக்கு எடுத்துவரும் பொங்கல், தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களை வழியிலேயே யாரிடமாவது குடுத்துட்டு வந்திருவார். ஒருநாள் கூட வீட்டுக்கு கொண்டு வந்ததில்லை. அந்த பழக்கம்தான் பிறருக்கு உதவி செய்யும் பண்பை எங்களுக்கு வளர்த்தது. நாம் நேர்மையாக பயணிக்கும் போது ஏமாளியாகவும், கோமாளியாகவும் நம்மை சித்தரிப்பார்கள். அதையெல்லாம் கேட்டு நம் பண்பை இரை ஆக்கிவிடக்கூடாது” என்கிறார் தோழர்!
அருண் சின்னத்துரை
நன்றி : ஆனந்த விகடன், 25.11.2020