tamilnadu

img

கண்ணீரில் மிதக்கும் தமிழக மீனவர்கள் - கே.ஜி. பாஸ்கரன்

ஒன்றிய அரசின் தவறான, பாரபட்சமான அணுகுமுறையால் தமிழக மீனவர்கள் அனுதினமும் செத்து செத்துப்  பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடலுக்குள் போகும் மீனவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உயிருடன் திரும்பி வருவதும் சவாலான ஒன்றாக மாறி இருக்கிறது. உயிரைப் பணயம் வைத்தே ஒவ்வொரு மீனவரும் கடலுக்குள் செல்லும் நிலை உருவாகி உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தாக்கப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. படகுகள் சேதமாக்கப்படுகின்றன. கைப்பற்றப்படுகின்றன. இவை அனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளில் மிகவும் அதிகரித்து உள்ளது. அதாவது பாஜக அதிகாரத்திற்கு வந்த பின் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. 

சம்பவம் ஒன்று:  நாகை மீனவர்கள் 

கடந்த செப்டம்பர் 9 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சார்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகின் மீது மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர். மீனவர்களின் படகு கவிழ்ந்து படகில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள வலை உள்ளிட்டு 6.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கடலில் மூழ்கி விட்டன. விசாரணை என்ற பெயரில் 6 மணி நேரம் மீனவர்களை தாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட 4 மீனவர்களையும் தமிழக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் ஓரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழக கடலோரக் காவல்படை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

சம்பவம் இரண்டு : தூத்துக்குடி மீனவர்கள் 

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சார்ந்த 22 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் ஆகஸ்ட் 5 அன்று அழைத்துச் சென்றனர். பின்னர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி, கைது செய்து, ஆகஸ்ட் 6 அன்று புத்தளம் மாவட்டம் கில்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆகஸ்ட் 20 வரை மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20 அன்று, விசாரணையை செப்டம்பர் 3 க்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. செப்டம்பர் 3-அன்று 12 மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம் விதித்துள்ளார். தவறும்பட்சத்தில் 6 மாத சிறைத்தண்டனை என உத்தரவிட்டுள்ளார். இதர 10 மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. 22 மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி தருவைக்குளத்தில் 1000 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 250 விசைப்படகுகளும், 350 நாட்டு படகுகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இன்னும் சில சம்பவங்களும் முதலமைச்சர் கடிதமும்   

செப்டம்பர் 7 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் துவக்கத்தில் ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பின்னணியில் தமிழக முதலமைச்சர் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பினார். இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். கூட்டுப் பணிக்குழு மூலம் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 116 மீனவர்களையும், 184 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாரம்பரிய உரிமையும் கூட்டுப்பணிக்குழுவும்  

இலங்கையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் தான் தமிழகத்தின் 80 சதவீத மீன் பிடிப்புப் பகுதி உள்ளது. இந்த இரண்டு கடல் பகுதிகளும் குறுகிய எல்லை கொண்டவை. பன்நெடுங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் இப்பிராந்தியத்தில் தான் மீன் பிடித்து வந்தனர். இந்த பாரம்பரிய உரிமையை ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வை காணமுடியும். இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள, இரு நாட்டு மீனவர்களைக் கொண்ட பேச்சுவார்த்தை கடந்த 2010 இல் துவங்கி பல கட்டங்களாக நடைபெற்றது.  இறுதியில் 2016 நவம்பர் மாதம் புதுதில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாக் நீரிணை கடல் பகுதியில் இழுவலைகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நிறுத்திக் கொள்வது எனவும், அத்தொழிலில்  ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு மாற்றுத் திட்டங்களை இந்திய அரசு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதுவரை இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் எந்த ஒரு மீனவர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கக் கூடாது, கைது செய்யக்கூடாது, படகுகளை சேதப்படுத்தக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை கண்காணிக்க இரு நாட்டு உயர் அதிகாரிகளைக் கொண்ட கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டது.  கூட்டுப் பணிக்குழு பெயரளவில் இரண்டு மூன்று முறை கூடியது. இறுதியாக 2020 இல் இலங்கையில் அக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கூட்டுப்பணிக்குழு கூடவில்லை. கூட்டுப்பணிக்குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம், பாக் நீரிணைப் பகுதியில் இழுவலைகளை படிப்படியாகக் குறைத்து, மீனவர்களுக்கு மாற்று திட்டங்களை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்தது. இதுவும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. 

மோடி அரசின் பம்மாத்து 

கடல் தாமரை மாநாடுகளை நடத்தி நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் மீனவர்களது பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் எனப் பேசிய பாஜக அரசு, மீனவர்களது பிரச்சனையை கண்டும் காணாமல் இருக்கிறது . இதிலும் தனது மத அரசியலை பாஜக செய்கிறது.  கணிசமான கிறிஸ்தவ மக்கள் மீன்பிடித்  தொழில் ஈடுபடுகிறார்கள் தமிழக பாஜக மதரீதியாக மீனவர்களை பிரித்தாலும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது.  மறுபக்கம் பிரச்சனைக்குரிய பாக் நீரிணைப் பகுதியை விட்டு ஆழ் கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம்  மதிப்பில் படகு, பரப்பு வலை, தூண்டில் உள்பட உபகரணங்கள் கொடுக்கப்படும் என ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. திட்ட மதிப்பில் 50 சதவீத பணத்தை ஒன்றிய அரசு மானியமாகவும், 20 சதவீத பணத்தை மாநில அரசு மானியமாகவும், 20 சதவீத பணம் வங்கிக் கடனாகவும் 10 சதவீத பணம் மீனவர்களது பங்களிப்பாகவும் வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. வருடத்திற்கு 500 வீதம் 4 வருடத்திற்கு 2000 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டது. 2016 இல் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பெயரளவில் ஒரு சில மீனவர்களுக்கு மட்டுமே இந்த படகுகளை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் கானல் நீராக மாறி விட்டது.  

பேச்சுவார்த்தையை துவக்குக!

ஒன்றிய அரசு நூறு சதவீத மானியத்துடன் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்க வேண்டும். படகின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  பாதுகாக்கப்பட   வேண்டும். ஒரு முறை படகு கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு சராசரியாக மூவாயிரம் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. ஒரு படகு கடலுக்குள் ஒரு முறை சென்று வர டீசல் மற்றும் இதர பொருட்களுக்கு அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை செலவாகிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.12 மட்டுமே மானியமாக கிடைக்கிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை இந்திய அரசு கூட்ட வேண்டும் . மீனவர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை துவக்க ஆக்கப்பூர்வமான    நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

சிபிஎம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  

இலங்கையில் சிறையில் வாடும் மீனவர்களை  நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.  படகுகளை மீட்க வேண்டும். சிறையில் வாடும் மீனவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு  நிவாரணம்  வழங்கிட வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கும்  நிவாரணம்  வழங்கிட வேண்டும் . ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடி தொழிலை  மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்களது பிரச்சனைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20.9.24 அன்று காலை ராமேஸ்வரத்தில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதில் மீனவர்களும், ஜனநாயக எண்ணம் கொண்டோரும்,  உழைக்கும் மக்களும் பெரும் திரளாக பங்கேற்க அறைகூவி அழைக்கிறோம்.