நீட் தேர்வால் தமிழக மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் இடம் கிடைப்பதில்லை - இளம் மருத்துவர் கூடல் நிகழ்ச்சியில் குமுறல்
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் சார்பில் இளம் மருத்துவர் கூடல் ஞாயிறன்று மதுரை சொக்கிகுளம் அருகில் உள்ள ஜேசி ரெசிடண்சியில் மரு. நேரு பாபு தலைமையில் நடைபெற்றது. மரு. சுகதேவ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மரு. நேருபாபு நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். மரு. டி. சுந்தரராமன் ‘மருத்துவத்தில் அரசியல் காரணிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களின் பிரச்சனைகள், நீட், நெக்ஸ்ட், எஃப்எம்ஜிஇ தேர்வுகள் குறித்தும் அவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளின் நிலை பற்றி விவாதம்
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவர்களின் பணிகள் குறித்தும், அவை எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகின்றன, எப்படிப்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள், அவர்களுக்கு தரமான சிகிச்சையை உறுதி செய்வது மற்றும் நோயாளிகளுடன் பேசும் முறை குறித்தும் இளம் மருத்துவர்கள் கருத்துகளை பகிர்ந்தனர். மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணம், வேலை நேரம், ஊதிய உயர்வு, விடுதி வசதிகள், பணியிட பாதுகாப்பு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணிச்சுமைகள் குறித்தும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாணவர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் சுந்தரராமன், அரிகரன், நேருபாபு, பகத்சிங், கருணாகரன், சுகதேவ், அமிர்தமணி ஆகியோர் பதிலளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் “நிகழ்கால அரசியலில் மார்க்சிய அணுகுமுறை” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் வாழ்த்துரை வழங்கினார். மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் பொதுச் செயலாளர் மரு. எஸ். காசி நிறைவுரையாற்றினார்.
தமிழக மருத்துவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், “இன்றைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 1980-90 காலக் கட்டத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கங்கள் இருந்ததால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை எதிர்த்து மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினோம். அதனால் அன்றைக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் இவ்வளவு தூரம் வளரவில்லை,” என்று குறிப்பிட்டனர். “இன்றைக்கு தனியார் மருத்துவமனைகளில் அடிமைகள் போல் வேலை செய்ய இளம் மருத்துவர்கள் தேவை என்பதற்காகவே நீட் தேர்வுகள் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கைகளை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தி நடத்தி வருகிறது. கல்வியில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க, கல்வியை மாநிலப் பட்டியலில் வைக்க வேண்டும். இதற்காக பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வினால், மருத்துவ முதுகலை படிப்புகளான எம்.எஸ்., எம்.டி., எம்.சி.ஹெச், டி.எம் போன்ற படிப்புகளுக்கு வெளி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முன்பு மாநில அரசு கட்டுப்பாட்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டபோது அரசு மருத்துவர்களுக்கு இந்த படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டிற்குச் சென்ற பின், மாநில அரசுக்கு 25 சதவீத இடம் மட்டுமே முதுகலை பாடங்களில் ஒதுக்கப்படுகிறது.
மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் அதிகரிப்பு
“மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் என்பது அதிகரித்துவிட்டது. அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் பணி வரை அவுட்சோர்சிங் முறையே கையாளப்படுகிறது. நிரந்தர பணி என்பது மறுக்கப்படுகிறது. இதனால் ஓய்வு காலத்தில் பென்சன்கூட கிடைப்பதில்லை,” என்றும் அவர்கள் விமர்சித்தனர். “மருத்துவ காப்பீடு உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனியார் மருத்துவமனைகள், சாமானிய மக்களை கண்டு கொள்வதில்லை. எனவேதான் மக்களுக்கான மருத்து வத்தை நாம் கொண்டு செல்வதற் கும், மருத்துவர்களுக்கான பிரச்சனை களை எடுத்துச் சொல்வதற்கும் அமைப்பாக நாம் ஒன்றுகூட வேண்டும்,” என்று தெரிவித்தனர். “அதற்கான இளம் மருத்துவர்களை இங்கே ஒன்றிணைத்து இருக்கின் றோம். வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு, அதற்கான தீர்வை எட்ட வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.