சாலை போக்குவரத்து, ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து, அரசு பொது போக்குவரத்தையும், ஆட்டோ, கார், வேன் உள்பட மோட்டார் வாகன சிறு தொழில் நிறுவனங்களை முற்றிலும் கார்ப்பரேட் நிறுவனமயமாக்கி வருவதை கண்டித்தும், 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்துசெய்து மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மார்ச் 24 அன்று, ஒரு லட்சம் ஓட்டுநர்கள் பங்கேற்கும் தில்லி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது. அதற்கு ஆதரவாக சிஐடியு திருச்சி மாநகர் ஆட்டோ, சாலை போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அருள், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க சுரேஷ், அரசு போக்குவரத்துக் கழக கருணாநிதி, ஆட்டோ சங்க சார்லஸ், வெற்றிவேல் ஆகியோர் பேசினர். அரசு போக்குவரத்துக் கழக சிங்கராயர் நன்றி கூறினார்.