மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்: 222 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மயிலாடுதுறை, மே 5- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், 222 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 66 லட்சத்து 860 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 49 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் நடமாடும் மின்கலன் பொருத்திய தூய்மை வாகனத்தையும், கூட்டுறவுத்துறை சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் கடனுதவியையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 68 ஆயிரத்து 400 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும் என மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 66 லட்சத்து 860 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இக்கூட்டத்தில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சித் தலைவர் தபூங்கொடி, மணல்மேடு பேரூராட்சித் தலைவர் கண்மணி மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.