tamilnadu

img

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்: 2027 பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027-ஆம் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் பதிலளித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கு பிரதமர் மோடி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் மட்டும் எப்போது தொடங்கும் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்தது. மதுரை மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி  எழுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.
இதனை தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், 2026-க்குள் பணிகள் முடிந்துவிடும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது முடிவடையும் என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர், கட்டுமான பணிகளை 2027-ஆம் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.