பறக்கட்டும் வெண்புறா
போர் என்ன செய்யும்? போதி மரத்தில் பாடை அமைக்கும் பூமணத் தில்பிண வாடை கலக்கும் தாலாட்டு பாடிய தாய்க்குலம் ஒப்பாரியாய்க் கதறிட வைக்கும் போர் என்ன செய்யும்? அப்பா விகளைப் பிணங்கள் ஆக்கும் ஆறாய் ரத்தம் பீறிட வைக்கும் போர்க்களச் செலவுகள் வரியாய் மாறும் பொதுஜனம் தலையில் சுமையாய் ஏறும் போர் என்ன செய்யும்? உடமைகள் உரிமைகள் அனைத்தும் பறிக்கும் சொந்தம் இழந்து அகதிகள் ஆக்கும் வளர்ச்சியைத் தடுக்கும் விலைகள் உயர்த்தும் பொருளா தாரம் நிலைதடு மாறும் போர் என்ன செய்யும்? சூழல் கெடுக்கும் ஊழல் பெருக்கும் அமைதி பறிக்கும் வெறுப்பு வளர்க்கும் உள்நாட் டுக்குள் மதங்கள் மோதும் ஒற்றுமை தகர்க்கும் மனிதம் சிதைக்கும் வெண்புறா பறக்கட்டும் வேதனை நிறுத்தட்டும் சாவுதரும் ஆயுதங்கள் ஏவுகணை உறங்கட்டும் ஒத்துப் போகப் பாதை வகுப்போம் யுத்தத் தால்வரும் நட்டம் தடுப்போம்