கோவை தீக்கதிருக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு
தீக்கதிருக்கு மதுரையில் சொந்த அலுவலகக் கட்டிடம் உள்ளது. அதேபோல் கோவையிலும் அச்சு இயந்திரம், எண்மப் பதிப்பு ஆகியவற்றுக்கு இடம் தேவைப்படுகிறது. கோவை தண்ணீர் பந்தலில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் இடத்தில் ரூ. 1 கோடிக்கு சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஆறு மாத காலத்தில் கட்டி முடிப்போம். கோவை மாவட்ட தொழிலாளி வர்க்கத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாம் வரலாம், போகலாம். ஆனால் தீக்கதிர் என்றென்றைக்கும் நீடித்து நிலைத்து நிரந்தரமாக இருக்கும்.
கே.பாலகிருஷ்ணன் உரையில் இருந்து...
கோயம்புத்தூர், செப். 28 - பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய ஒடுக்குமுறை, வர்ணாசிரமம் என எல்லாவித பாகுபாடுகளுக்கு எதிராகவும் சமரசமில்லாமல் போராடும் மகத்தான பணியை தீக்கதிர் செய்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கோவை எஸ்.என்.ஆர். மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 27) தீக்கதிர் வைர விழா சிறப்பு மலர் வெளியீடு, சந்தா வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய கே.பாலகிருஷ்ணன் தீக்கதிர் நாளேடு குறித்து பேசியது வருமாறு: 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட விதை இன்று தமிழகம் முழுவதும் கிளை பரப்பி நிற்கிறது. எத்தனையோ சோதனைகளுக்கு இடையிலும் தீக்கதிர் தொடர்ந்து தொய்வின்றி நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்புலமாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்புலமாக இருக்கும் தொழிலாளி வர்க்கம், உழைக்கும் மக்கள்தான் இதற்கு காரணம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் நான்கு பதிப்பு காணும் பத்திரிகை தீக்கதிர் தான். இதற்கு தொழிலாளி வர்க்கத்தின் தத்துவம் தான் உந்து சக்தியாக இருக்கிறது. தீக்கதிரில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதற்கு நிகர் வேறு பணி கிடையாது. நெருக்கடியான காலங்களிலும் சமாளித்து பொறுப்பை நிறைவேற்றுவது சவாலானது. வரலாற்று ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கும் தீக்கதிர் வைரவிழா மலரை அத்தனை பேரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “தீக்கதிர் உழைப்பாளி மக்களின் உரிமைக் குரலாக விளங்குகிறது. பல விசயங்களைச் சுட்டிக்காட்டி கவனப்படுத்தி தெளிவுபடுத்துகிறது. நல்ல விசயங்களை பாராட்டுவதுடன், குறைகள் இருந்தால் அதையும் தயக்கமில்லாமல் சுட்டிக்காட்டும் நாளிதழாக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தீக்கதிரின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து வருகிற அனைவருக்கும் நன்றி. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் குரலாக விடாப்பிடியாக, தொடர்ச்சியாக, அவர்களின் நியாயத்தைப் பேசும் தீக்கதிர் முதலாளித்துவ நியாயங்களை தவிடு பொடியாக்கும் தத்துவார்த்த ஆயுதமாகத் திகழ்கிறது. உலகில் வேறெங்கும் இல்லாத, சாதிய ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட சனாதனம், வர்ணாசிரமம், பிராமணியத்தை அடிப்படையாக கொண்ட மனு நீதியை விமர்சித்துப் பேசுவோர் பலர், பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக தங்களை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் பஞ்சமர்கள், ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் குரலை வலிமையோடு பேசி, மனுநீதியை சுட்டெரிக்கும் சுடராக தீக்கதிர் திகழ்கிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, ஆணுக்கு நிகர் பெண் என போர் முரசு கொட்டும் நாளிதழாக, மார்க்சிஸ்ட் கட்சியின் குரலாக தீக்கதிர் உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய ஒடுக்குமுறை, வர்ணாசிரமம் என அனைத்துப் பாகுபாடுகளையும் எதிர்த்து ஊடக உலகில் சமரசமில்லாமல் போராடும் மகத்தான பணியை தீக்கதிர் செய்து வருகிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.