ஜமாபந்தியில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு
அரியலூர், மே 23- அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியின் 3 ஆவது நாளான வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு தீர்வுக் காணப்பட்டது. கீழப்பழுவூர் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாயத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்களைப் பெற்றார். பின்னர், அவர் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 36 மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் ஆகியவற்றிற்கான ஆணைகளை வழங்கினார். இதில் 220 மனுக்கள் விசாரணையும், 8 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டது.
கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளி மீது குண்டர் சட்டம்
தஞ்சாவூர், மே 23-
சொத்து தகராறில் ஏற்பட்ட கொலை வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்கோட்டம் பாப்பநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட ஆம்பலாப்பட்டு பகுதியில், சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 02.04.2025 ஆம் தேதி தீர்க்கரசன் என்பவர், பாப்பாநாட்டில் இருந்து, தனது வீடான ஆம்பலாப்பட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது, அவருடைய இருசக்கர வாகனத்தை வழிமறித்து சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் படுகாயமடைந்த தீர்க்கரசன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 09.04.2025 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஹேமா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாப்பாநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாப்பாநாடு சரித்திர பதிவேடு குற்றவாளியான திருக்குமார்(49), ஆம்பலாபட்டுவைச் சேர்ந்த அவரது அண்ணன் கலையரசன்(46), தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி சாலையைச் சேர்ந்த சசிகுமார்(52) மற்றும் முனிஷ்குமார்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியான திருக்குமார்(49) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதன்படி 21.05.2025 ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.