திருவனந்தபுரம், செப். 5- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆர்எஸ்எஸ்-ன் அறிவிக்கப்பட்ட இலக்கான இந்து ராஷ்டிராவை அறிவிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். இது வெறும் அறிவிப்பு அல்ல. நாட்டில் பல்வகை மக்கள் கூடாது, இந்துக்கள் மட்டுமே போதும் என்ற மன நிலையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்றார். நூலகப் பேரவை மாநிலச் செயலர் வி.கே.மது எழுதிய ‘உறியாட்டம் நிலைக்குந்ந வாக்குகள்’ என்கிற நூலை அவர் வெளியிட்டுப் பேசினார். நாட்டில் இத்தகைய நிலையை தவிர்க்க வேண்டுமெனில், மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசமைப்புச் சுதந்திரத்தை பாதுகாக்கும் இயக்கம் உருவாக வேண்டும். ஒவ்வொரு தரப்பு மக்களும் சந்திக்கும் பிரச்சனைகளை எழுப்பி, ஒன்றிய அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்களும் இயக்கங்களும் எழ வேண்டும். நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் இப்போது துணை ராணுவப் படைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆர்எஸ்எஸ் தன்னை பாதி ராணுவமாக மாற்றுகிறது. இந்த பாசிச அத்துமீறல் எப்படி மக்களை வாயடைக்க வைத்துள்ளது என்பதை வி.கே.மதுவின் புத்தகம் விரிவாக விளக்குகிறது என்றார்.