tamilnadu

img

போட்டித் தேர்வு : வெற்றியாளர்களை சொந்தம் கொண்டாடாதீர்கள்! - ஹரி

போட்டித் தேர்வு முடிவுகள் வெளிவருகையில் ஊடகங்களில் விளம்பரங்கள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. ஒரே தேர்வரின் புகைப்படங்கள் பல்வேறு பயிற்சி மையங்களின் விளம்பரங்களில் இடம் பெறுகிறது. யாரைக் கவர்வதற்காக இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றனவோ, அவர்கள் திகைப்புக்கே உள்ளாகிறார்கள்.  இந்த மையத்தில் பயின்றால் வேலைக்குச் சென்று விடலாம் என்ற முடிவுக்கு வருவதை விட, இத்தனை மையங்களில் படித்தால்தான் தேர்ச்சி பெறுவோமோ என்ற மனநிலைக்குதான் தள்ளப்படுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று மையங்களில் பணத்தைக் கட்டிச் சேர்பவர்களும் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் ஹர்தீப் சிங் ஆனந்த் என்பவர் ஒரு பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். தன்னால் முடிந்தவரை, தேர்வர்களைப் பயிற்றுவித்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதில் முனைப்பாக இருப்பவராவார். அவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்கிறார். தனது பகுதியில் உள்ள சில பயிற்சி மையங்கள், தேர்வு முடிவுகள் பற்றிய தவறான விபரங்களைத் தந்து விளம்பரங்கள் தருவதாகவும், தேர்வர்கள் ஏமாற்றப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டார். ஜபல்பூரில் பெரும் அளவில் வாசிக்கப்படும் தைனிக் பாஸ்கர் என்ற நாளிதழையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரினார். பெரும் அளவில் விளம்பரக்கட்டணங்களை வாங்கிக் கொண்டு அந்த நாளிதழ் போலியான புள்ளிவிபரங்களோடு விளம்பரங்களைப் பிரசுரிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அவரது குற்றச்சாட்டில் போதிய ஆதாரம் இல்லை என்று இழுத்து மூடப்பட்டது. இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் தற்போது Guidelines for Prevention of Misleading Advertisement in Coaching Sector, 2024 வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தேர்வர்களை அல்லது பெற்றோர்களைத் தவறாக வழி நடத்தக்கூடிய விளம்பரங்களைப் பயிற்சி மையங்கள் வெளியிடுவதைத் தடுக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நவம்பர் 13, 2024 முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இப்படித்தான் பற்பசையிலும் ஒரு பற்பசை நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் 100% கிருமிகளை அழிக்கிறது என்று இருந்தது. ஒரு நுகர்வோர் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அப்படி அந்த பற்பசையால் 100% கிருமிகளை ஒழிக்க சாத்தியமில்லை என்று வாதிட்டார். விசாரித்த பிறகு, அவர் சொல்வதைப் போல அந்தப் பற்பசையால் முழுமையாக கிருமிகளை ஒழிக்க முடியாது என்றும், அது தவறான விளம்பரம் என்றும் தீர்ப்பு வந்தது. இப்போதெல்லாம் அந்த விளம்பரத்தில் கிருமிகளை அழிப்பது போன்ற காட்சி இருக்கவே செய்கிறது. ஆனால் கடைசியில் ஓரிரண்டு கிருமிகள் சுற்றிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.  அப்படியான நிலைமைதான் தற்போது போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் பயிற்சி மையங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் மையத்தில் படித்தால் வேலை உறுதி என்றோ, 100% வெற்றி உறுதி என்றெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு விளம்பரங்களை வெளியிட முடியாது.  நாங்கள்தான் இது விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று கீழே போட்டு விட்டோமே என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்க முடியாது. எவ்வளவு கண் தெரிந்தாலும் படிக்க முடியாத அளவில் அதைப் போட்டுவிட்டுத் தங்களுக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் அந்த முயற்சிகள் எல்லாம் இனி இருக்க முடியாது. 

கடந்த சில டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளில் முதல் மதிப்பெண்களைப்  பெற்றவர்களின் புகைப்படங்கள் பல பயிற்சி மையங்களின் விளம்பரங்களில் வந்தன. அவர்கள் தங்கள் மையங்களில்தான் படித்தார்கள் என்று அவைகள் கூறின. சில பெரிய பயிற்சி மையங்களின் வரவேற்பு அறைகளில் அவர்கள் மைய நிர்வாகிகளுடன் எடுத்த புகைப்படங்கள் மெகா சைஸில் வைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் இப்படிப் புகைப்படங்கள் வைப்பதற்கு அல்லது விளம்பரங்கள் தருவதற்கு வேகத்தடை போடுகின்றன.  கேட்காமலேயே செய்கிறார்கள் ஒருவேளை விளம்பரத்தில் இவர் இந்த மையத்தில் பயின்று நடைபெற்ற போட்டித் தேர்வில் முதலிடம் அல்லது இரண்டாவது இடம் பெற்றுள்ளார் என்று விளம்பரம் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது அந்த விளம்பரத்தில் அவரது பெயரும், புகைப்படமும் இடம் பெறுவதோடு, அந்தக் குறிப்பிட்ட நபர் அந்த மையத்தில் பயிற்சிக் கட்டணம் செலுத்தியற்கான விபரங்களும் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், தங்களிடம் கேட்காமலேயே அந்த மையங்கள் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்டு விட்டன என்று தேர்வர் சொல்வதும் நடைபெறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில், யாருடைய பெயரும், புகைப்படமும் விளம்பரத்தில் வெளியாகிறதோ, அவர்களிடம் எழுத்துப் பூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் சொல்கின்றன. பொதுவாக, பயிற்சி மையங்களின் விளம்பரங்களில் தங்களிடம் அனைத்து வசதிகளும் உள்ளதாக இடம் பெறுகின்றன. இனிமேல் அப்படிப் பொதுவான முறையில் எல்லாம் விளம்பரம் செய்ய முடியாது. பயிற்சி மையங்களில் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள், நூலகம், அந்த நூலகத்தில் எவ்வளவு மற்றும் எத்தகைய புத்தகங்கள், பயிற்சிக்கான கட்டணம், ஒருவேளை பயிற்சியை இடையில் நிறுத்திவிட்டால் எவ்வளவு கட்டணம் திரும்பத் தரப்படும் உள்ளிட்ட விபரங்கள் பயிற்சி மையங்களால் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். எவ்வளவு காலம் பயிற்சி தரப்படும் என்பது தேர்வர்களுக்கு தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்.

இனி இப்படி செய்யக்கூடாது விளம்பரங்களில், “100 விழுக்காடு வேலைவாய்ப்பு”, “தேர்ச்சி நிச்சயம்”, “இப்ப இல்லேனா இனி கிடைக்காது”, “விரைவில் சேருங்கள், இன்னும் குறைந்த இடங்கள்தான் உள்ளன” போன்ற வாசகங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது. தேர்வர்களை அவசரப்படுத்தும் இந்த உத்திகளைப் பின்பற்றாதீர் என்று விதிமுறை அறிவுறுத்துகிறது. இது போன்ற உத்திகள் மற்றும் நேர்மையற்ற வர்த்தக உத்திகள் இனிமேல் ஒருபோதும் கையாளப்படக்கூடாது என்பதை புதிய விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதுபோன்ற விதிகளை மீறும் பயிற்சி மையங்கள் மீது புகார் செய்வதற்கான வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, ஏதாவது ஒரு பயிற்சி மையம் வெளியிடும் விளம்பரம் தவறானது என்று உணர்பவர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு மையத்திடம் புகார் அளிக்கலாம். எந்த மாவட்டத்தில் அந்தப் பயிற்சி மையம் இயங்குகிறதோ, அந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடமும் முறையிடலாம். ஒருவேளை அந்தப்பயிற்சி மையம் நேர்மையற்ற முறையில் விளம்பரம் செய்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தெரிய வந்தால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் நடவடிக்கை எடுக்கலாம்.

தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (National Consumer Helpline system) பயிற்சி மையங்கள் இணைந்து கொள்வது அவசியம் என்று விதிமுறைகள் வழிகாட்டுகின்றன. இவ்வாறு இணைந்து கொள்வதன் மூலம் தவறான புகார்களை பயிற்சி மையங்கள் எதிர்கொள்வதும் எளிதானது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை, கட்டணம் என்று கோடி, கோடியாக வாரிச் சுருட்டுகிறார்கள். இதற்கு எதிரான விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் எச்சரிக்கைகள் விடப்படுவது வழக்கம். ஆனால், கல்வி வியாபாரமாகி இருப்பது பெருகி வருகிறது.  அத்தகைய நிலைமை போட்டித் தேர்வுகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று இந்த பயிற்சி மையங்களின் கொள்ளையைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் கருதுகிறார்கள்.