சென்னை, ஜன. 12- மார்ச் 24 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளதாக அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறி வித்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா வில் அகில இந்திய சாலை போக்கு வரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தலைவர் நேபாள் பட்டாச்சார்யா, செயல் தலைவர் கே.கே.திவாகரன், சிஐடியு தேசியச் செயலாளர் ஆர்.கருமலையான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் லட்சுமய்யா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் தவறான கொள் கைகளால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்குப் பிறகும் டீசல் விலை கூடிக் கொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இன்சூரன்ஸ் பிரீமி யம் இரட்டிப்பு ஆகிவிட்டது. சுங்கக் கட்டணங்கள் இரண்டு முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகன திருத்த சட்டம்- 2019 எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. ஸ்கிராப்பிங் கொள்கை, பசுமை வரி, அபராதத் தொகை போன்றவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கின்றன. சாலை ஒழுங்காகப் போடப்படா தது, பராமரிக்கப்படாதது போன்ற வற்றை புறந்தள்ளிவிட்டு, பழி முழுவ தும் சாலை விபத்துகளை சந்திக்கும் ஓட்டுநர்கள் மீது திருப்பப்பட்டு அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்தே ஓட்டு நர்கள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பிராவிடண்ட் ஃபண்ட், மருத்துவக் காப்பீடு, எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை ஆகிய சட்டபூர்வமான எந்த உரிமை யும் இந்தத் துறையில் உழைக்கும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேருக்கு கிடையாது. இந்த அணி திரட்டப்படாத சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அறவே கிடையாது. மாநில அரசு போக்குவரத்துக் கழ கங்கள் கடுஞ்சுமையை எதிர்கொள் கின்றன. மூலதன மறு நிதி வழங்கப்படு வதில்லை, லாப நஷ்ட அடிப்படையில் தான் பரிசீலிக்கப்படுகின்றன. இந்தக் கழகங்கள் யாவும் பெரிய நிதி நெருக்கடிக்குள் கொண்டு தள்ளப் பட்டு விட்டன. இந்த நெருக்கடியின் சுமை முழுவதும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டு அவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். இதில் மாற்றங்களை ஏற்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சம்மே ளனம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் ஒன்றிய அரசின் பிடிவாதப் போக் கினால் பலனற்றுப் போய்விட்டன. எனவேதான், போக்குவரத்துத் துறையையும், தொழிலாளர் நலனை யும் பாதுகாக்க வலியுறுத்தி, அணி திரட்டப்படாத சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் உருவாக்கக் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளு க்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி மார்ச் 24 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.இதில் நாடு முழுவதும் உள்ள சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.