tamilnadu

img

பொந்தன்புளியும் அயனி மரங்களும்

இது ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு மரம். பெயர் பொந்தன்புளி. பெரிதாய், உயர அகல பிரம்மாண்டமாய், கிளைகள் பரப்பி நிற்கிறது அந்த மரம். அதை முதல் முதலாய் பார்த்தபோது அதன் பெயர் தெரியவில்லை. மரத்தோடு சேர்ந்து பேருந்து நிறுத்தம். அதன் பெயரும் பொந்தன் புளி தான். பேருந்துக்காக காத்திருந்தவர்கள், அவர்களின் சின்னவயதிலிருந்தே இதை பார்த்து வருவதாகவும், அப்போதே பெரியமரமாக இருந்ததாகவும் சொன்னார்கள். 
எங்கள் ஆற்றூரிலும் இப்படியான பெரிய மரங்களை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்கு மிக அருகிலேயே கத்தோலிக்க ஆலயம் ஒன்றிருக்கிறது. முன்னால், கிணற்றோடு சேர்ந்து ஒரு பெரிய அயனி மரம் நின்றிருந்தது, மூன்று பேர் சேர்ந்து சுற்றிநின்று அணைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது. அப்படி பெரிய, கிளைகள் பல விரித்த உயரமான மரம்.
அதுபோன்றே பெரிய மரம் ஒன்று நான் ஒன்றாம் வகுப்பு படித்த வில்லுண்ணிக்கோணம் பள்ளிக்கூடத்திலும் இருந்தது. மண்ணுக்கு மேலாகத் தெரிந்த அதன் பெரிய வேர்களில் உட்கார்ந்து பைக் ஓட்டுவது போல விளையாடிய நினைவுகளும் இப்போதும் மனதில் பதிந்தே கிடைக்கின்றன. இந்த இரு மரங்களும் இப்போது இல்லை. பொந்தன்புளி, இன்று போல, பல தலைமுறையினருக்கு இதமான நிழல் தரவேண்டும் என்பதே நம் ஆவல்!