tamilnadu

img

‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ காரல் மார்க்சின் உயிலாக வெளியான நூல்!

மார்க்சிய மூலவர்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கெல்சின் மகத்தான படைப்புகளில் ஒன்று குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல். “இந்த நூலை வெளியிடுவது என்பது காரல் மார்க்சின் உயிலை நிறைவேற்றுவதற்கு சமம்” என ஏங்கெல்ஸ் 1884 ஆம் ஆண்டு எழுதிய முதல் முகவுரையில் குறிப்பிடுகிறார்.  

கைப்பிரதிகளைத் தேடிய ஏங்கெல்ஸ்

மார்க்ஸ் இறந்த பின்னர் மூலதனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை வெளியிடும் பணி ஏங்கெல்சின் முக்கிய கடமையாகியது. அதற்காக அவர் மார்க்சின் பல்வேறு கைப்பிரதிகளை தேடி எடுத்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அமெரிக்காவின் மானுடவியல் ஆய்வாளர் ஹென்றி மோர்கன் எழுதிய “பழங்கால சமூகம்”  (Ancient Society)   எனும் நூலிலிருந்து ஏராளமான குறிப்புகளை மார்க்ஸ் எடுத்து வைத்திருந்ததை ஏங்கெல்ஸ் கண்டார். மோர்கன் நூலின் அடிப்படையில் ஒரு நூலை எழுத மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார் என்பது ஏங்கெல்சுக்கு விளங்கியது. எனவேதான் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூலை தனது பல பணிகளுக்கு இடையே இரண்டே மாதங்களில் ஏங்கெல்ஸ் எழுதி முடித்தார். இந்த நூலின் முதல் பதிப்பு 1884ம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஜூரிச் நகரில் வெளியிடப்பட்டது. இந்த நூல் ஏங்கெல்ஸ் காலத்திலேயே ஜெர்மானிய/ ருமேனிய/ டென்மார்க்/ ரஷ்ய/ ஆங்கிலம்  உட்பட பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

 மோர்கனின் மாபெரும் ஆய்வு

மோர்கன் 40 ஆண்டுகள் அமெரிக்காவின் பழங்குடி இன மக்களிடையே அவர்களில் ஒருவராக வாழ்ந்து அவர்களின் குடும்பம்/ பண்பாடு/ வாழ்வுமுறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அந்த தரவுகள் அடிப்படையில் வேறு சில பழங்குடி இன மக்களின் வாழ்வையும் ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன் அடிப்படையில்தான் “பழங்கால சமூகம்” எனும் நூலை எழுதினார். டார்வினின் “பரிணாம கோட்பாடுகள்” மற்றும் மார்க்சின் “உபரி மதிப்பு” கண்டுபிடிப்புகளுக்கு இணையானது மோர்கனின் கண்டு பிடிப்பு என ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். மோர்கனின் தரவுகளை மார்க்சிய கோணத்தில் ஆய்வு செய்து ஏங்கெல்ஸ் இந்த நூலை எழுதினார்.

 தாய் வழி சமூக குடும்பம்

அன்று நிலவிய குடும்ப வடிவம் கடவுளால் மனிதனுக்கு தரப்பட்ட வரம் எனவும் புனிதமானது எனவும் காலம் காலமாக இந்த குடும்ப வடிவம் உள்ளது எனவும் அதுவரை கருதப்பட்ட மதிப்பீட்டை மோர்கனின் நூல் அடியோடு புரட்டிப்போட்டது.  

ஆதிப்பொதுவுடைமைச் சமூகம்

 மனித குலத்தின் தொடக்க காலத்தில் இருந்த சமூகத்தில் குடும்ப வடிவம் என்ன? ஒட்டு மொத்த இனக்குழுவுமே குடும்பமாக இருந்தது. குடும்பம் எனும் தனி வடிவம் இல்லை. இயற்கையில் கிடைத்த அல்லது வேட்டையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் பொதுவானதே! உபரி மதிப்பு இல்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை. தனிச்சொத்து இல்லை; அரசு இல்லை; ராணுவம் இல்லை; போட்டி-பொறாமை இல்லை.குழந்தைகளும் பொதுவானவர்களே! குழந்தைக்கு தாய் யார் என்பது தெரியும். ஆனால் தந்தை யார் என்பது தெரியாது. ஏனெனில் ஒரு குழுவில் ஆண் அனைத்து பெண்களுடனும் பெண் அனைத்து ஆண்களுடனும் உறவு கொள்ளும் முறை இருந்தது. குழந்தை அழுதால் எந்த ஒரு பெண்ணும் பால் தருவார். குழந்தையின் தேவையை எந்த ஒரு ஆணும் நிறைவேற்றுவார். குழந்தைக்கு அனைத்து பெண்களும் தாயாகவும் அனைத்து ஆண்களும் தந்தையாகவும் இருந்தனர். எனவே இது தாய் வழி சமூகமாக இருந்தது. பெண் பல சமயங்களில் இனக்குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டைக்கு சென்றனர். வேட்டையாடி வந்த மாமிசத்தை பெண்தான் பிரித்து கொடுத்தார். பெண்ணுக்கு என உற்பத்திக் கருவிகள் சொந்தமாக இருந்தன. ஆண் அவற்றை சொந்தம் கொண்டாட முடியாது. இதனை ஆதி பொதுவுடமை சமூகம் என ஆய்வாளர்கள் வரையறுத்தனர்.

 பல வடிவங்கள் எடுத்த குடும்பம்

ஆதிப் பொதுவுடமை சமூகம் உணவு சேகரித்தல்/ வேட்டையாடுதல்/ கால்நடை வளர்ப்புடன் மேய்ச்சல் / விவசாயத்தின் தொடக்க காலம் என பல கட்டங்களாக இருந்தது என்பதை ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் குடும்ப வடிவங்கள் மாறிக்கொண்டே வந்துள்ளன. ஒரு கட்டத்தில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளிடையே உறவு இருக்க கூடாது என தடை செய்யப்பட்டது. பின்னர் ஒரு தாய் மற்றும் சகோதரி/ சகோதரர்களின் குழந்தைகளிடையே உறவு தடை செய்யப்பட்டது. பின்னர் ஒரு இனக்குழுவில் உள்ள ஆண் அல்லது பெண் அதே இனக்குழுவில் உள்ள ஆண் அல்லது பெண்ணுடன் உறவு கொள்வது தடை செய்யப்பட்டது. ஒரு இனக்குழுவில் உள்ள ஒரு ஆண் அல்லது பெண் இன்னொரு இனக்குழுவில் உள்ள ஆண்களுடன் அல்லது பெண்களுடன் உறவு வைத்து  கொள்வது எனும் இனக்குழுக்களிடையே உறவுமுறை உருவானது. இப்படி பல வடிவங்களை எடுத்த குடும்பம் இறுதியில் “ஒருவனுக்கு ஒருத்தி” எனும் ஒருதார மணமாகவும் குடும்பமாகவும் பரிணமித்தது. ஒருதார மணம் என்பது எப்பொழுதுமே பெண்ணுக்குதான் நிர்பந்திக்கப்பட்டது. நடைமுறையில் ஆணுக்கு அது பொருத்தப்பட்டது இல்லை என்பதை ஏங்கெல்ஸ் இடித்துரைக்கிறார். இந்த குடும்பம் எனும் வடிவத்தின் பரிணாமத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு என்னவெனில் பெண் தனது சம உரிமையை இழந்தாள்.

 சங்க கால பிரதிபலிப்பு

ஆதிப்பொதுவுடமை சமூகத்தின் கட்டங்களான உணவு சேகரித்தல்/ வேட்டையாடுதல்/ மேய்ச்சல் எனும் வடிவங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகவே நிகழ்ந்துள்ளன. அதற்கு பின்னர் உருவான வர்க்க சமூகங்கள் ஒவ்வொரு பூகோள பகுதிக்கும் வெவ்வேறு மாதிரியாக நிழந்தாலும் ஆதி பொதுவுடமை கட்டம் என்பது ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. உதாரணத்துக்கு சங்க இலக்கியம் பேசும் குறிஞ்சி/முல்லை வாழ்வியல்கள்  ஆதிபொதுவுடமை சமூக அமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளன. ஒரு நற்றிணைப்பாடல் “கானவன் அம்பு எய்து கொன்ற முள்ளம் பன்றியின் இறைச்சியை வெட்டி எடுத்து அவன் மனைவி கொடிச்சி அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்தாள்” என குறிப்பிடுகிறது. வேட்டையாடப்பட்ட மாமிசத்தை  பங்கிட்டு கொடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருந்தது என்பதை இது பிரதிபலிக்கிறது. இதே தமிழ்ச்சமூகத்தில் பின்னர் வர்ணாசிரமம் நுழைந்த பொழுது பெண்ணும் சூத்திரராக இருந்த உழைப்பாளியும் பல உரிமைகளை இழந்தனர்

.  ஏன் குடும்ப வடிவங்களில் மாறுதல் ஏற்பட்டது?

மேய்ச்சல் சமூகத்தின் இறுதி கட்டத்திலும் அதற்கு பின்னர் உருவான  விவசாய சமூகத்திலும் சமூகத்துக்கு தேவையானதைவிட கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உபரி உற்பத்தி, வணிகத்தில் பண்டமாற்று செய்யப்பட்டது. இது செல்வம் பெருகுவதற்கு வழி வகுத்தது. மேலும் செல்வம் பெருக உற்பத்திக்கு மனிதர்கள் தேவைப்பட்டனர். இனக்குழுக்களிடையே நடந்த போர்களில் தோற்றவர்கள் கொல்லப்படுவதற்கு பதிலாக அடிமைகளாக கொண்டு வரப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். உபரி உற்பத்தி பெருகியது. ஆதி பொதுவுடமைச் சமூகம், அடிமைச் சமூகமாக - முதல் சுரண்டல் சமூகமாக மாறியது. அது வரை பொதுவாக இருந்த சொத்துரிமை என்பது இப்பொழுது தனிச் சொத்து உரிமையாக மாறியது. உபரி மதிப்பை சிலர் வளைத்துக்கொண்டனர். உபரி மதிப்பை அடிமைகள் உரிமை கோராமல் இருக்க சில ஏற்பாடுகளும் உருவாயின. இந்த ஏற்பாடுகள்தான் ‘அரசு’ எனும் அமைப்பு.  இந்த சொத்துரிமை என்பது ஆணின் உரிமையாக மாறியது. சமூக உற்பத்தியிலிருந்து பெண் விலக்கி வைக்கப்பட்டாள். சொத்துரிமையை ஆண் தனது வாரிசுக்கு மட்டுமே தர விரும்பினான். எனவே தனது சொத்துக்களை பாதுகாக்க வாரிசுகளை உருவாக்கும் இயந்திரமாக பெண் உருவாக்கப்பட்டாள். “தாய் வழி  உரிமையை என்றைக்கு பெண் இழந்தாளோ அன்றே பெண் தனது சம உரிமையையும் இழந்தாள்” என ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

 அரசு என்பது அடக்குமுறை கருவியே!

குடும்பமும் தனி சொத்துரிமையும் எப்படி தொடக்கத்திலிருந்தே இருக்கவில்லையோ; அவை எப்படி சமூக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கால கட்டதில்தான் உருவானதோ அதே போல அரசு எனும் அமைப்பும் ஒரு கட்டத்தில்தான் உருவானது. ஏதென்ஸ்/ ரோம்/ ஜெர்மானிய சமூகங்களில் அரசு உருவானதை ஆய்வு செய்யும் ஏங்கெல்ஸ் ,அரசு எனும் அமைப்பு சுரண்டும் வர்க்கங்களின் நலனை காக்கும் ஒரு அடக்குமுறை கருவியே என்பதை நிலைநாட்டுகிறார். அரசின் வடிவம் முடியாட்சி/ குடியரசு/ தேர்தல் ஜனநாயக முறை என எந்த வடிவத்திலும் இருக்கலாம். ஆனால் அது சுரண்டப்படும் வர்க்கங்களை குறிவைக்கும் அடக்குமுறை கருவியே! முதலாளித்துவம் உருவாக்கியுள்ள தேர்தல் அடிப்படையிலான ஜனநாயக குடியரசுக்கும் இது பொருந்தும் என தெளிவுபடுத்துகிறார் ஏங்கெல்ஸ்.  குறைந்தபட்சம் 15 இடங்களில் இந்தியா குறித்து இந்த நூலில் ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு இடத்தில் தமிழ்ச் சமூகம் குறித்தும் ஒரு இடத்தில் திராவிடர் குறித்தும் ஒரு இடத்தில் நாயர் சமூகம் குறித்தும் ஏங்கெல்ஸ் குறிப்பிடுட்டுள்ளார். சமூகம் மீண்டும் இனக்குழு வாழ்க்கை முறைக்கு திரும்ப இயலாது. அதே சமயத்தில் இனக்குழு முறையில் இருந்த பெண்ணின் சம உரிமை மீட்கப்பட வேண்டும். அதற்கு சமூக உற்பத்தியில் பெண்ணுக்கு உரிய பங்கை உத்தராவாதப்படுத்துவதுதான் ஒரே வழி என ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதுவரை குடும்பத்தில் கூட்டாட்சியும் குடும்பத்தை ஜனநாயகமயமாக்குவதும் மிக முக்கியம்.  “நவீன சோசலிசத்தின் அடிப்படைப் பெட்டகங்களில் ஒன்று இந்த நூல்” என லெனின் குறிப்பிடுகிறார். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கற்க ஏங்கெல்சின் இந்த நூல் மிக இன்றியமையாதது எனில் மிகை அல்ல.