மதுராந்தகம்,மே 24-காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த இரண்டு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குறித்து அக்கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று வரும் சூழல் உள்ளது. இதனால் மன உளைச் சலுக்கு ஆளான அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் செய்யூர் - தாம்பரம் சென்ற அரசுப் பேருந்தை திங்களன்று (மே 24) சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த அணைக்கட்டு காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ததோடு குடிநீர் வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.